உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் உடான் திட்டத்தின் அடுத்த கட்டத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் - ஜோத்பூர் விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்
நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்குப் பெரும் ஊக்கமளிக்கும் வகையில், பிராந்திய விமான இணைப்பை மேலும் விரிவுபடுத்தும் வகையிலும், உலகத் தரம் வாய்ந்த விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேலும் மேம்படுத்தும் வகையிலும், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (04.07.2026) 'உடான்' திட்டத்தின் அடுத்த கட்டமான விக்சித் உடான் திட்டத்தைத் தொடங்கி வைத்து, ஜோத்பூர் விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத்தையும் திறந்து வைத்தார்.
ராஜஸ்தான் ஆளுநர் திரு ஹரிபாவு கிசன்ராவ் பாக்டே, ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன் லால் சர்மா, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ராம்மோகன் நாயுடு, மத்திய கலாச்சாரம் - சுற்றுலாத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் திரு முரளிதர் மோஹல், பிற முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
2016 அக்டோபரில் தொடங்கப்பட்ட உடான் திட்டம், 669 வழித்தடங்களைச் செயல்படுத்தி, 95 விமான நிலையங்கள், ஹெலிபோர்ட்கள், நீர்வழி விமான நிலையங்களை இணைப்பதன் மூலம் பிராந்திய இணைப்பை பெரிய அளவில் மேம்படுத்தியுள்ளது. இதனால் இதுவரை 1.66 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயனடைந்துள்ளனர். இந்த வெற்றியைத் தொடர்ந்து, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, விமானப் போக்குவரத்து சார்ந்த வளர்ச்சியைத் துரிதப்படுத்தவும், அடுத்த பத்து ஆண்டுகளில் சுமார் ₹ 29,000 கோடி ஒதுக்கீட்டில் திருத்தப்பட்ட உடான் திட்டத்திற்கு 25 மார்ச் 2026 அன்று ஒப்புதல் அளித்தது.
திருத்தப்பட்ட உடான் திட்டம், தற்போதுள்ள சேவை வழங்கப்படாத விமான ஓடுபாதைகளிலிருந்து ₹ 12,159 கோடி முதலீட்டில் 100 விமான நிலையங்களை மேம்படுத்துவதன் மூலம் பிராந்திய விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துகிறது. மேலும், இது பிராந்திய விமான நிலையங்களுக்கான செயல்பாடுகள், பராமரிப்பு ஆதரவு ஆகியவற்றுக்காக ₹ 2,577 கோடியையும், ₹ 3,661 கோடி முதலீட்டில் 200 நவீன ஹெலிபேடுகளை மேம்படுத்துவதையும், பிராந்திய விமான நிறுவனங்களின் செயல்பாடுகளைத் தக்கவைப்பதற்காக ₹ 10,043 கோடி தொடர் நிதியையும் வழங்குகிறது.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு கிஞ்சரபு, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன், சுமார் ₹ 29,000 கோடி என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க செலவில் தொடங்கப்பட்ட திருத்தப்பட்ட 'உடான்' திட்டம், இந்தியாவின் விமானப் போக்குவரத்துப் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது என்றார். 'உடான்' என்பது வெறும் இணைப்புத் திட்டம் மட்டுமல்ல எனவும் அது இந்தியாவின் லட்சியங்களைக் கொண்டாடும் ஒரு நிகழ்வாகும் என்றும் அவர் தெரிவித்தார். இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்கள் முதல் தொலைதூரப் பகுதிகள் வரை, விமானப் போக்குவரத்தானது, பொருளாதார வளர்ச்சி, சுற்றுலா, வேலைவாய்ப்பு, சமூக உள்ளடக்கம் ஆகியவற்றுக்கான ஒரு சக்திவாய்ந்த அம்சமாக மாறியுள்ளது என்று அவர் கூறினார்.
மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் திரு. முரளிதர் மோஹல் பேசுகையில்,
திருத்தப்பட்ட உதான் திட்டத்தின் தொடக்கம், இந்தியாவின் விமானப் போக்குவரத்துப் பயணத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்றார். இந்த முன்முயற்சிகள், பிராந்திய இணைப்பை மேம்படுத்தி, விமான நிலைய உள்கட்டமைப்பை வலுப்படுத்தி, சுற்றுலா- வர்த்தகத்தை ஊக்குவித்து, நாடு முழுவதும் அனைவரையும் உள்ளடக்கிய சமூக-பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் என்று அவர் கூறினார்.






கருத்துகள்