நால்வர் பலியான சிவகாசி செங்கமலபட்டியில் சட்ட விரோத பட்டாசு ஆலை வெடிவிபத்து
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா செங்கமலப்பட்டியில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கரமான வெடிவிபத்தில் நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர், இன்று காலை 8:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. செங்கமலப்பட்டியைச் சேர்ந்த ரவீந்திரனுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில், அவரது மகன்கள் ராம்பிரகாஷ் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் அதிகாரப்பூர்வமான அனுமதியின்றி மறைமுகமாக ஒரு தகர ஷெட் அமைத்து பட்டாசுகள் தயாரித்து வந்துள்ளனர்,
இன்று காலையில் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, பாஸ்பரஸ், கந்தகம் உள்ளிட்ட வேதிப்பொருட்களின் இடையே ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது வெடி விபத்தின் வீரியம் மிகவும் அதிகமாக இருந்ததால், பட்டாசு தயாரித்த அந்த தகரக் கொட்டகை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது, விபத்தில் சிக்கி இராம்பிரகாஷ் (வயது32), இன்னாசி முத்து (வயது 44), ஐயப்பராஜ் (வயது 37) மற்றும் பாண்டித்துரை (வயது 35) ஆகிய நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர் மேலும் இராமச்சந்திரன் (வயது 40) என்பவர் 60 சதவீதத்திற்கும் அதிகமான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு மற்றும் விபத்து தொடர்பாக சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து நில உரிமையாளர்கள் உள்ளிட்ட 11 நபர்களை உடனடியாகக் கைது செய்துள்ளனர், சிவகாசி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தொடர்ந்து வெடித்துக் கொண்டிருந்த தீயைக் கட்டுப்படுத்தி, இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினார்கள்,
செங்கமலபட்டியில் சட்ட விரோத பட்டாசு ஆலை வெடிவிபத்தில் நான்கு பேர் உயிரிழந்திருப்பது பெரும் சோகம். இது போன்ற வெடிவிபத்துகள் தொடர்கதையாகி வருவதை தடுக்க முடியாதது புரையோடிப் போயிருக்கிற மோசமான நிர்வாகம் மற்றும் ஊழலின் வெளிப்பதேயாகும். ஒவ்வொரு முறையும் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவதும், பின்னர் ஜாமீனில் வெளிவருவதும், மீண்டும் அப்பாவி மக்களை கொல்வதும் வாடிக்கையாகி விட்டது. இந்த விபத்துகளை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வு வேண்டும். முதலமைச்சர் உடனடியாக இது குறித்து தீவிர நடவடிக்கை எடுத்து சட்ட விரோத ஆலைகளை மூட உத்தரவிடுவதோடு, அங்கிருக்கக் கூடிய ஆலைகள் சட்டத்திற்குட்பட்டு, முறையாக விதிகளின் படி செயல்படக்கூடிய வகையில் அரசு கவனம் செலுத்த வேண்டும். என பல தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்



கருத்துகள்