வளர்ச்சிப் பணிகளில் இளைஞர்களின் ஒத்துழைப்பு, பங்கேற்பை வலுப்படுத்துவது குறித்த கூட்டு அறிக்கையை பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் இளையோர் நல அமைச்சர்கள் ஏற்றுக் கொண்டனர்
மத்திய இளையோர் நலன், விளையாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இளையோர் நலன் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரிக்ஸ் இளையோர் நல அமைச்சர்கள் நிலையிலான கூட்டம், 2026 ஆகஸ்ட் 22 சனிக்கிழமையன்று விசாகப்பட்டினத்தில் நிறைவடைந்தது.
இந்தக் கூட்டம், மத்திய இளையோர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்றது. இதில் அத்துறைக்கான மத்திய இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சே, செயலாளர் திரு சுனில் பாலிவால் ஆகியோர் பங்கேற்றனர்.
அமைச்சர்கள் நிலையிலான இந்தக் கூட்டத்தில், பிரிக்ஸ் இளையோர் உச்சிமாநாடு, இளைஞர் குழுக் கூட்டத்தின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு, விவாதங்கள் நடைபெற்றன. இதில் பெறப்பட்ட பரிந்துரைகள், கருத்துக்கள், அமைச்சர்கள் நிலையிலான விவாதங்களுக்கு முக்கிய அடித்தளத்தை வழங்கின.
இதில் பங்கேற்ற பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இடையே உரையாற்றிய மத்திய இளையோர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ், இந்தியா சுதந்திரம் அடைந்து 100-வது ஆண்டை நிறைவு செய்யும் 2047-ம் ஆண்டிற்கான தொலைநோக்கு ஆவணம் ஒன்றை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்தார். இந்த இலக்கை எட்டும் வகையில், நாட்டை வழிநடத்த, அரசியல் பின்னணி இல்லாத 1,00,000 இளம் தலைவர்களை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதன் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் தொடங்கபட்டுள்ளதாக அவர் கூறினார். தன்னார்வத் தொண்டு, கற்றல், தலைமைத்துவம், மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுதல் ஆகியவற்றிற்கான ஒருங்கிணைந்த தளமாக மை பாரத் தளம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தற்போது, 2.5 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள், இந்த இணையதளத்தில் பதிவு செய்து முனைப்புடன் பங்கேற்று வருவதாக டாக்டர் மாண்டவியா கூறினார்.
கருத்துகள்