இணையதள மோசடிகளுக்கு வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்டதாக தமிழ்நாடு முழுவதும் 205 பேர் கைது
பொதுமக்களின் வங்கிக் கணக்குகளை தவறாகப் பயன்படுத்தி ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 205 சைபர் குற்றவாளி களை சென்னை காவல் துறை கைது செய்துள்ளது.
தேசிய இணையவழி குற்றப் புகார் பதிவேற்ற https://cybercrime.gov.in தளத்தில் பதிவான புகார்களை சென்னை காவல் துறையின் சைபர் குற்றப் பிரிவு தீவிரமாக ஆய்வு செய்ததில், பணத்தாசை காட்டி பொது மக்களின் வங்கிக் கணக்குகளை பெறும் சைபர் குற்றவாளிகள், அவற்றை சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைக்கு தொடர்ந்து பயன்படுத்தி வருவதும் தெரியவந்ததையடுத்து, சென்னை காவல்துறை ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், சைபர் க்ரைம் காவல்துறையினர் கடந்த 6. மற்றும் 7-ஆம் தேதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில், பல்வேறு வங்கிகளில்
செயல்பட்டு வந்த 310 'மியூல்' வங்கிக் கணக்குகள் (மோசடிக்கு பயன்படுத்தப்படும் வாடகைக் கணக்குகள்) கண்டறியப்பட்டன. அதன் மூலம் நடந்த பணப் பரிவர்த்தனைகளை காவல்துறையினர் ஆய்வு செய்ததில், இணைய மோசடிகளுக்காகவே இந்தக் கணக்குகளைப் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. சென்னை, கோயம்பத்தூர் மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழ்நாட்டின் 25 மாவட்டங்களில் நடந்த இந்த சோதனையில், இந்த நெட்வொர்க்குடன் தொடர்புடைய 205 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டவர்கள் யார்? என்பது குறித்து சைபர் க்ரைம் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
"பொதுமக்கள் தங்களது வங்கிக் கணக்குகளை முன் பின் தெரியாத வெளிநபர்கள் பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. சிறிய அளவிலான கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு, உங்கள் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் மற்றவர்கள் பணத்தைப் போட்டு எடுக்க அனுமதிப்பது சட்டப் படி குற்றமாகும். இத்தகைய செயல் களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை பாயும்" என சென்னை காவல்துறை ஆணையர் அமல்ராஜ் எச்சரித்துள்ளார். வெளிவந்த குற்றம் குறித்து ஒரு பார்வை :-இராமநாதபுரம் மாவட்டதிலிருந்து தேசத்தை சிதைக்கும் கூட்டு மோசடி பயங்கரம் தமிழகத்தை உலுக்கிய 500 கோடி ரூபாய் சைபர் மோசடி: 205 பேர் ஒரே நாளில் கைது!
தமிழகம் முழுவதும் ஒரே நாளில் நடத்தப்பட்ட அதிரடி வேட்டை, மாநிலத்தின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கும் ஒரு மாபெரும் நிழல் உலகத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 500 கோடி ரூபாய் அளவிலான நிதி, டிஜிட்டல் மோசடிகள் மூலம் சுருட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவு காவல்துறை நடத்திய துல்லியமான நடவடிக்கையில், மாநிலம் முழுவதும் 205 பேர் கைதாகியுள்ளனர். அவர்களில் 16 பேர் கல்லூரி மாணவர்கள். 205 நபர்களிடமிருந்து மட்டும் 310 வங்கி கணக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒட்டுமொத்தமாக 350 வங்கி கணக்குகளைக் கொண்டு இந்த 500 கோடி ரூபாய் மோசடி சங்கிலி பின்னப்பட்டுள்ளது. இது வெறும் தொடக்கமே தவிர, இதன் பின்னணித் 'திமிங்கிலங்களைப்' பிடிக்க வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது.
இந்த மர்ம கும்பல் பொதுமக்களின் பணத்தைத் திருட நான்கு முக்கிய உத்திகளைக் கையாண்டுள்ளது. அவை
டிஜிட்டல் அரஸ்ட் (Digital Arrest): சிபிஐ அல்லது அமலாக்கத்துறை அதிகாரிகள் போலப் பேசி, "நீங்கள் சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளீர்கள்" என்று மிரட்டி, சட்ட ரீதியான நடவடிக்கையிலிருந்து தப்பிக்கப் பணம் கேட்டுப் பறித்து மிரட்டுவது.
சிறு முதலீட்டில் பெரும் லாபம் ஈட்டலாம் என்ற போதையை இளைஞர்களிடம் விதைத்து, அவர்களைப் பெரும் தொகையை இழக்கச் செய்வது.
லிங்க் டச் (Link Touch): கவர்ச்சிகரமான செய்திகள் அல்லது வங்கிப் புதுப்பிப்பு என்ற பெயரில் அனுப்பப்படும் 'மர்ம லிங்குகளை' கிளிக் செய்ய வைத்து, மொபைல் போன்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது.
போலி முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வரும் 'லக்கி வின்' விளம்பரங்கள் மூலம் ஆசை காட்டிப் பணம் பறிப்பது.
இந்த மோசடிக் கும்பலின் அதிநவீன தொழில்நுட்பத் திறன் எங்கே வெளிப்படுகிறதென்றால், ஒருவரிடம் திருடப்படும் பணம் நேரடியாக மோசடி செய்பவர்களின் கணக்கிற்குச் செல்வதில்லை. புலனாய்வு அமைப்புகளின் கண்களில் மண்ணைத் தூவ, அந்தப் பணம் 20-க்கும் மேற்பட்ட வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அடுக்கடுக்காக மாற்றப்பட்டு (Layering), இறுதியில் மர்ம கும்பலின் கைக்குச் செல்கிறது. இந்தச் சிக்கலான பணப் பரிமாற்றப் பாதைதான் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் பெரும் தடையானது.
வெறும் கமிஷனுக்காக வங்கி கணக்குகளை வாடகைக்கு விட்ட 'ஸ்லீப்பர் செல்கள்'
இந்த மாபெரும் மோசடி சங்கிலியின் மிக முக்கியமான கண்ணிகள் 'வாடகை வங்கி கணக்கு' வைத்திருப்பவர்கள். இவர்களைத் தான் புலனாய்வுத் துறையினர் 'சைபர் மியூல்' (Cyber Mule) அல்லது 'சீட்டிங் ஸ்லீப்பர் செல்கள்' என்கின்றனர். இவர்கள் சமூகத்தில் சாதாரண மாணவர்கள், தொழிலாளர்கள் அல்லது வேலையில்லாத இளைஞர்களாக வலம் வருவார்கள். தங்கள் வங்கிக் கணக்கை மோசடிக் கும்பல் பயன்படுத்த அனுமதித்து, அதுவரை 'செயலற்ற நிலையில்' (Dormant) இருப்பார்கள். ஒரு மோசடி அரங்கேறும்போது, இவர்களது கணக்குகள் திடீரென 'ஆக்டிவேட்' செய்யப்பட்டு, கோடிக்கணக்கான ரூபாய் வந்து செல்லும் 'பரிமாற்ற மையங்களாக' மாறும்.
ஒரு லட்சம் ரூபாய் பணத்தைப் பரிமாற்றம் செய்ய 1,000 ரூபாய் வரை கமிஷன் வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறு ஆசைக்கு அடிபணிந்து, 10,000 ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை கமிஷன் பெற்ற நபர்கள் இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். கைதான 205 பேரும் இத்தகைய 'சிறு மீன்களே'.
தமிழகத்தின் பின்வரும் பகுதிகளில் வங்கி கணக்குகள் இந்தச் சட்டவிரோத நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன:
கரூர், கிருஷ்ணகிரி, கடலூர், அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, திருவாரூர், திருவள்ளூர், தேனி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், கோயம்பத்தூர், சேலம், சென்னை மற்றும் திருவொற்றியூர்.
இந்த மோசடி விவகாரத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தின் பங்கு குறித்து எழுந்துள்ள புகார்கள் மாநிலத்தின் நிதிப் பாதுகாப்பிற்கே (State's Financial Security) விடுக்கப்பட்ட சவாலாகத் தெரிகிறது.
இது ஒரு சாதாரணக் குற்றம் என்பதைத் தாண்டி, ஒரு காவல்துறை - குற்றவாளி' இடையேயான ரகசியக் கூட்டணியோ (Nexus) என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. லஞ்சம் கொடுப்பவர்கள் விடுவிக்கப்படுவதாகவும், லஞ்சம் தர மறுப்பவர்கள் மட்டுமே கைது செய்யப்படுவதாகவும் எழுந்துள்ள புகார்கள், கண்காணிப்பு அமைப்புகளின் முழுமையான தோல்வியையே (Failure of surveillance systems) பறைசாற்றுகின்றன. மாநிலக் காவல் துறை இந்த மாவட்டத்தின் மீது ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்துத் தீவிரமான கவனம் செலுத்த வேண்டும். வாடகை வங்கி கணக்கு மோசடிகளின் ஆணிவேரைக் கண்டறியாவிட்டால், சட்டத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை முற்றிலுமாகச் சிதைந்துவிடும்.
சென்னை காவல்துறை ஆணையர் அலுவலக வளாகம் பெற்றோர்களின் கண்ணீராலும் ஆவேசக் குரல்களாலும் நிறைந்து காணப்பட்டது. 5 முதல் 6 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி, பிள்ளைகளைப் படிக்க வைக்கும் நடுத்தர வர்க்கத் தாய்மார்களின் குமுறல் ஒட்டுமொத்த சமூகத்தின் மனசாட்சியையும் உலுக்குவதாக இருந்தது.
"என் பையன் திருடல, கொள்ளை அடிக்கல; ஏதோ கேம் ஆடுனான்னு சொல்றாங்க. 6 லட்சம் பீஸ் கட்டி படிக்க வைக்கிறேன், இப்போ அவன் வாழ்க்கை போயிருச்சுன்னா கவர்மெண்ட் பதில் சொல்லுமா? இந்த போலீஸ்காரங்க பதில் தருவாங்களா?" என்று உண்மை தெரியாமல் கதறினார் ஒரு தாய். தம்பி என்ன செய்தான் என்றே தெரியாமல் கைக்குழந்தையுடன் சாலையோரம் தவித்து நின்ற உறவினர்களின் நிலை இதைவிடப் பரிதாபமாக இருந்தது. வெறும் 500 அல்லது 1000 ரூபாய் கமிஷனுக்காகவும், ஆன்லைன் விளையாட்டுகளுக்காகவும் தங்கள் பிள்ளைகள் 'பச்ச மண்ணு' போலச் சிக்கிக்கொண்டதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. "நாங்க ஓட்டுப் போட்டுக் கஞ்சி குடிச்சு வாழ்றவங்க சார், எங்க பிள்ளைய இப்படிப் புடிச்சிட்டு வந்துட்டாங்களே" என்ற அவர்களின் ஆதங்கம், சைபர் விழிப்புணர்வு இன்னும் அடித்தட்டு மக்களைச் சென்றடையவில்லை என்பதையே காட்டுகிறது
பொதுமக்களே, உங்கள் ஒரு சிறிய கவனக்குறைவு உங்களை ஒரு பயங்கரவாதக் கும்பலின் அல்லது நிதி மோசடிக் கும்பலின் கூட்டாளியாக மாற்றிவிடும். இதோ உங்களுக்கான சில இறுக்கமான எச்சரிக்கைகள்:
வங்கி கணக்கை விற்காதீர்கள்: 'Work from home' அல்லது 'சுலபமாகப் பணம் சம்பாதிக்கலாம்' என்ற விளம்பரங்களை நம்பி உங்கள் வங்கி கணக்கு விவரங்களையோ, ஏடிஎம் கார்டையோ, கடவுச்சொல்லையோ யாருக்கும் தரக்கூடாது. பிறரின் பணத்தை உங்கள் கணக்கில் பெற்று, அதை வேறு ஒருவருக்கு மாற்றுவது (Money Laundering) தண்டனைக்குரிய பெருங்குற்றம். இதில் 1,000 ரூபாய் கமிஷன் என்பது உங்களைச் சிறைக்கு அனுப்பும் தூண்டில் புழு.
இன்ஸ்டாகிராம் மற்றும் டெலிகிராம் வழியாக வரும் 'பெரிய லாபம்' தரும் எந்த ஒரு செயலையையும் செய்யாதீர்கள். இந்த பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான மாபெரும் சைபர் மோசடியின் பின்னணியில் உள்ள முக்கிய சூத்திரதாரிகள் (Masterminds) இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
காவல்துறையினரால் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 205 பேரும், வெறும் கமிஷன் பணத்திற்காகத் தங்கள் வங்கி கணக்குகளை மோசடி கும்பலிடம் வாடகைக்குக் கொடுத்த கணக்குதாரர்கள் மட்டுமே ஆவர். இவர்கள் இந்த மாபெரும் நெட்வொர்க்கில் வெறும் கருவிகளாகவும், 'சீட்டிங் ஸ்லீப்பர் செல்களாகவும்' மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
மக்களின் பணத்தை ஆன்லைன் மூலம் கொள்ளையடித்து, இந்த வாடகை வங்கி கணக்குகள் மூலம் பல கட்டங்களாக மாற்றி, இறுதியாக தங்களது கணக்குகளுக்குக் கொண்டு சேர்த்த உண்மையான 'மர்ம மோசடி கும்பல்' (சூத்திரதாரிகள்) இன்னும் சட்டத்தின் பிடியில் சிக்காமல் தப்பித்தே உள்ளது.
இராமநாதபுரத்தில் பரவியுள்ள இந்த மோசடி வலையமைப்பில் சில உள்ளூர் காவல்துறை அதிகாரிகளே நேரடியாக ஈடுபட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் புகார்களும் எழுந்துள்ளன. அவர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு முக்கிய நபர்களை விடுவிப்பதாகவும், லஞ்சம் தர மறுப்பவர்களை மட்டுமே கைது செய்வதாகவும் கூறப்படுவதால், உண்மையான சூத்திரதாரிகளை நோக்கிய விசாரணைகள் தடைபட்டுள்ளன, சாதாரண எளிய மனிதர்களையும் மாணவர்களையும் மட்டுமே காவல்துறை கைது செய்வதால், இந்த வழக்கில் உயர் அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு ED (அமலாக்கத்துறை) அல்லது CBI போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலம் நேர்மையான சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வலியுறுத்துகிறது. அப்போதே இதன் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய முடியும்.
கைதான 205 பேரும் சாதாரண மனிதர்கள்தான். ஆசைக்கு இடம் கொடுத்து எதிர்காலத்தைத் தொலைத்துவிடாதீர்கள்! இதுவே எச்சரிக்கை ஆகவே தெரியாத தொலைபேசி எண்ணில் இருந்து பேசும் நபர்கள் குறித்து எச்சரிக்கை தேவை வங்கியில் மற்றும் சைபர் கிரைம் மூலம் புகார் செய்யலாம்.சென்னை பெருநகர காவல் துறையினரால் நாடு முழுவதும் இரு நாட்களில் நடைபெற்ற சிறப்பு நடவடிக்கையில், NCRP புகார்களின் அடிப்படையில் சைபர் குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்ட 310 Mule வங்கி கணக்குகள் சென்னை மாநகரில் கண்டறியப்பட்டு, அதன் அடிப்படையில் 205 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் “மியூல் வங்கி கணக்கு” வைத்திருப்பவர்களுக்கு எதிரான சிறப்பு அதிரடி நடவடிக்கை
தமிழ்நாடு காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவு சார்பில், மியூல் வங்கி கணக்குதாரர்களுக்கு எதிராக 06.08.2026 மற்றும் 07.08.2026 ஆகிய 2 நாட்கள் நடைபெற்ற சிறப்பு அதிரடி நடவடிக்கையில் 837 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். 601 வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், மேலும் 157 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.மாநிலம் முழுவதும் "மியூல் வங்கி கணக்கு" வைத்திருப்பவர்களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் சைபர் குற்ற வலையமைப்பை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு காவல்துறையின் இணையவழி குற்ற பிரிவு சார்பில் 06.08.2026 மற்றும் 07.08.2026 ஆகிய இரண்டு நாட்களில் 48 மணி நேர "மாநிலம் முழுவதும் மியூல் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை" மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கையின் மூலம் மாநிலம் முழுவதும் 837 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்சைபர் கிரைம் பிரிவினரால் முறையாக திட்டமிடப்பட்ட இந்நடவடிக்கை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகரங்களிலும் ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்ளப்பட்டது. இணையவழி குற்ற பிரிவு டி.ஜி.பி பாலா நாகதேவி, ஐ.பி.எஸ் இணையவழி குற்ற பிரிவு தலைமையகத்திலிருந்து இம்முழு நடவடிக்கையையும் மேற்பார்வையிட்டு, அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகரங்களுடன் சீரான ஒருங்கிணைப்பு மற்றும் நிகழ்நேர கண்காணிப்பை உறுதி செய்தார்.இச்சிறப்பு நடவடிக்கையில், மொத்தம் 9,804 தேசிய இணையக் குற்றப் புகாரளிப்பு இணையதளம் புகார்களுடன் தொடர்புடைய, .545,27,27,809/-அளவிலான மோசடி பண பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய நபர்கள் குறிவைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டனர். இந்நடவடிக்கையின் போது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களும், அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களின் மேற்பார்வையில் செயல்பட்டு. சைபர் குற்ற வழக்குகளில் பதிவு செய்யப்பட்ட 601 முதல் தகவல் அறிக்கைகளில் தொடர்புடைய 837 சைபர் குற்றவாளிகளை கைது செய்தனர். மேலும், சைபர் மோசடிகளுக்கு மியூல் வங்கி கணக்குகளை பயன்படுத்துதல் மற்றும் இயக்குதல் ஆகியவற்றை தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் 157 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
58 வங்கி கணக்கு
மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இச்சிறப்பு நடவடிக்கையின் போது, 204 செல்போன்கள். 185 சிம் கார்டுகள், 4 லேப்டாப்/டெஸ்க்டாப் கணினிகள். 1 பென் டிரைவ்/சேமிப்பு சாதனம், ரூ.1,02,000/- ரொக்கம், 114 வங்கி பாஸ்புக்குகள், 29 காசோலைப் புத்தகங்கள். 73 ஏ.டி.எம்/டெபிட் கார்டுகள், 1 கிரெடிட் கார்டு மற்றும் 2 இதர மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், தொடர் விசாரணை மற்றும் பகுப்பாய்விற்காக 155 செல்போன் எண்கள் மற்றும் 58 வங்கி கணக்கு விவரங்கள் கண்டறியப்பட்டன.
முக்கிய சாதனை
இந்த கைது நடவடிக்கைகள். நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ஒருங்கிணைக்கப்பட்ட சைபர் குற்ற வலையமைப்பை சீர்குலைத்து, அதன் செயல்பாடுகளை முறியடிப்பதில் ஒரு முக்கிய சாதனையாகும். சைபர் குற்றச் சூழலின் முக்கிய அங்கமான மியூல் வங்கி கணக்குகள் மூலம் சட்டவிரோத பணத்தைப் பெறுதல், பல்வேறு கணக்குகளுக்கு மாற்றுதல் மற்றும் பரிமாற்றம் செய்தல் ஆகியவற்றைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கை, இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய ஒருங்கிணைந்த நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
டிஜிட்டல் ஆதாரங்கள்
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்கள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு. குற்ற வலையமைப்பின் அடுத்தடுத்த அடுக்குகளில் செயல்படும் நபர்கள் மற்றும் நாடு முழுவதும் அவர்களுடன் தொடர்புடைய கூட்டாளிகளை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனுடன், இவ்வலையமைப்பில் தொடர்புடைய மேலும் பலரை கண்டறிந்து கைது செய்தல், மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டெடுத்தல் மற்றும் நாடு முழுவதும் செயல்படும் சைபர் குற்ற உள்ள தொடர்புகளை கண்டறிதல் உள்ளிட்ட வலையமைப்புகளுடன் நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கைது செய்யப்பட்ட நபர்கள் மீது சட்ட விதிகளின்படி கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், வங்கி கணக்குகளை பிறருக்கு வழங்குதல் அல்லது தவறாகப் பயன்படுத்த அனுமதித்தல் மூலம் சைபர் மோசடிகளுக்கு உதவும் நபர்களுக்கு இக்கைது நடவடிக்கைகள் ஒரு வலுவான எச்சரிக்கையாகவும் தடுப்பு நடவடிக்கையாகவும் அமையும்.ஆன்லைன் கடன் வழங்குவதாக கூறும் அறிமுகமில்லாத நபர்களின் அழைப்புகளில் எச்சரிக்கையாக இருக்கவும்:
அறிமுகமில்லாத நபர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு கடன் வழங்குவதாகக் கூறி புதிய வங்கி கணக்கு/நடப்புக் கணக்கு (Current Account) தொடங்குமாறோ அல்லது இணைய வங்கி சேவை தொடர்பான ரகசிய விவரங்களைப் பகிருமாறோ கேட்டால், அதற்கு பதிலளிக்க வேண்டாம். இத்தகைய கோரிக்கைகள் உங்கள் வங்கி கணக்கு தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கக்கூடும்.
பயன்பாட்டில் இல்லாத அல்லது நீண்ட காலமாக பரிவர்த்தனை மேற்கொள்ளப்படாத வங்கி கணக்குகளை உரிய வங்கி நடைமுறைகளின்படி மூடுமாறு கணக்கு வைத்திருப்பவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இத்தகைய செயலற்ற கணக்குகள் சைபர் குற்றவாளிகளால் குற்றச் செயல்களின் மூலம் பெறப்பட்ட பணத்தைப் பெறுவதற்கும் பரிமாற்றம் செய்வதற்கும் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
RBI எச்சரிக்கை: ‘Money Mule’ கணக்குகள்!உங்கள் வங்கிக் கணக்கை மற்றவர்களுக்கு பணம் பெறவும், மாற்றவும் பயன்படுத்த அனுமதிப்பது ஆபத்தானதாக இருக்கலாம்.
தெரியாத நபர்களுக்காக பணப் பரிமாற்றம் செய்யாதீர்கள்.
OTP, கடவுச்சொல், ATM/PIN போன்ற ரகசிய தகவல்களை யாரிடமும் பகிராதீர்கள்.
உங்கள் வங்கிக் கணக்கை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிப்பதற்கு முன் கவனமாக இருங்கள்.
‘Money Mule’ நடவடிக்கைகளில் ஈடுபடுவது கடுமையான சட்ட விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
உங்கள் வங்கிக் கணக்கு உங்கள் பொறுப்பு.













கருத்துகள்