கோயம்பத்தூர் மாநகராட்சி வரித் தண்டலர் லஞ்சம் வாங்கியபோது கைது: ரூபாய் .40,000 லஞ்சப் பணத்துடன் பிடிபட்டார்.
கோயம்பத்தூர் தெற்கு மண்டலம் 97வது வார்டு வரித் தண்டலர் யமுனா தேவி, மினி தியேட்டர் கட்டுவதற்கு வரி விதிப்பு அனுமதி வழங்க லஞ்சம் பெற்ற போது ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் பணம் பெற்ற கையுடன் பிடிக்கப்பட்டார்.
கோயம்பத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் சுந்தராபுரம் மாநகராட்சி வரி வசூல் மையத்தில் வைத்து லஞ்சம் பெற்ற நிலையில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.
மாநகராட்சியின் 97வது வார்டு, தெற்கு எல்லையில் உள்ளது. இங்கு குடிநீர் குழாய் கசிவு, தெருவிளக்கு பற்றாக்குறை, குப்பை சேகரிப்பு ஒழுங்கின்மை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் நீண்ட காலமாக நிலவி வருகின்றன. இந்த நிலையில், வார்டு மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டிய நிலையில் உள்ள மாநகராட்சி வரித் தண்டலர் மாறாக தனது பணியை துஷ்பிரயோகம் செய்து லஞ்சம் பெற்ற சம்பவம் அப் பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
97வது வார்டில் வசிக்கும் பிரகாஷ் என்பவர், தனக்கு சொந்தமான இடத்தில் மினி தியேட்டர் கட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக, அவர் சுந்தராபுரம் மாநகராட்சி வரி வசூல் மையத்தில் வரித் தண்டலர் யமுனா தேவியை அணுகினார். அப்போது, அந்த இடத்திற்கு காலியிட வரி செலுத்த வேண்டிய நிலை உள்ளதாகவும், அந்தப் பிரச்சனையை தீர்க்க ரூபாய் .40,000 லஞ்சம் தர வேண்டும் எனவும் யமுனா தேவி கூறியுள்ளார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரகாஷ், உடனடியாக மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தார். அவர்களின் அறிவுரையின் பேரில், இன்று சுந்தராபுரத்தில், பினாப்தலீன் ரசாயனப் பொடி தடவப்பட்ட ரூபாய் .40,000 பணத்தை பிரகாஷ் அரசு சாட்சி முன்னிலையில் யமுனா தேவியிடம் கொடுக்க, அந்தப் பணத்தை வாங்கிய யமுனா தேவியை மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பணம் பெற்ற கையுடன் பிடித்து கைது செய்தனர். தற்போது அவர் விசாரணைக்குப் பின் நீநிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்,

கருத்துகள்