தேசிய நதிகள் இணைப்புத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
நதிகளுக்கு இடையேயான நீர்ப் பகிர்விற்காக தேசிய தொலைநோக்குத் திட்டத்தை (NPP) மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதன் கீழ் தீபகற்பப் பகுதியில் 16 நதி இணைப்புத் திட்டங்கள் மற்றும் இமயமலைப் பகுதியில் 14 நதி இணைப்புத் திட்டங்கள் என மொத்தம் 30 நதிகள் இணைப்புத் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இத்திட்டங்களைச் செயல்படுத்தும் பொறுப்பு தேசிய நீர் மேம்பாட்டு முகமையிடம் (NWDA) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதில் முன்னுரிமைத் திட்டமான கென்-பெத்வா நதிகள் இணைப்புத் திட்டம் ரூ.44,605 கோடி மதிப்பீட்டில் தற்போது செயலாக்க நிலையை எட்டியுள்ளது. இத்திட்டம் மூலம் சுமார் 11.88 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், 62 லட்சம் மக்களுக்குக் குடிநீரும், 103 மெகாவாட் நீர்மின்சாரமும், 27 மெகாவாட் சூரிய மின்சாரமும் உற்பத்தி செய்யப்படும்.
மேலும், கோதாவரி - கிருஷ்ணா நதிகளை இணைக்கும் போலவரம் நீர்ப்பாசனத் திட்டம் தேசியத் திட்டமாக அறிவிக்கப்பட்டு, ஆந்திரப் பிரதேச அரசு மற்றும் போலவரம் திட்ட ஆணையத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக மத்திய அரசு இதுவரை ரூ.20,658 கோடி நிதி வழங்கியுள்ளது.
நதிகள் இணைப்புத் திட்டங்கள் அனைத்திலும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்பட்டு, நில கையகப்படுத்துதல் மற்றும் மறுவாழ்வு, மறுசீரமைப்பு நடவடிக்கைகள் உரிய விதிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பென்னார் (சோமசிலா) - காவிரி (கல்லணை) இணைப்புத் திட்டம், காவிரி (கட்டளை) - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட முக்கியத் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இத்தகவலை மத்திய ஜல் சக்தித் துறை இணையமைச்சர் திரு. ராஜ் பூஷண் சௌத்ரி மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.









கருத்துகள்