சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து பொன் மாணிக்கவேல் மனு மீதான விசாரணை விரைவில் தீர்ப்பு
சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கை எப்படி விசாரிக்க முடியுமென சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு அமர்வு கேள்வி.
சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் இந்த சிறப்பு அமர்வில் விசாரணைக்குப் பட்டியலிட வேண்டுமென பொன். மாணிக்கவேல் கூடுதல் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், குற்ற விசாரணை தொடர்புடைய வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தனி நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்த வழக்கை எப்படி நாங்கள் விசாரிக்க முடியுமெனறு பொன் மாணிக்கவேலுக்கு சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. சிலைக் கடத்தல் தடுப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஓய்வுபெற்ற தன்னை சிறப்பு அதிகாரியாக நியமிக்கும்படி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி பொன் மாணிக்கவேல், கடந்த 2019-ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். முன்னால் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, காவல்துறை தலைமை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அபய் குமார் சிங் ஆகியோருக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, சிலை கடத்தல், சிலை மாயம், சிலை செய்ததில் முறைகேடு தொடர்பான வழக்குகளில் சிபிஐ விசாரணை, காவல் நிலைய விசாரணை, 4 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டுமென வெவ்வேறு உத்தரவுகளை தனி நீதிபதி பிறப்பித்துள்ளார். இதனால் குழப்பம் ஏற்படுகிறது. எனவே சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் இந்த சிறப்பு அமர்வில் விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் என கூடுதல் மனு தாக்கல் செய்திருந்த மனு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, பொன் மாணிக்கவேல் தரப்பில், சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும் சிறப்பு அமர்வுதான் விசாரிக்க வேண்டும், கண்காணிக்க வேண்டும் என்ற நிலையில், தனி நீதிபதி விசாரித்து உத்தரவிட்டது தவறு என்று வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'யார் எந்த வழக்கை விசாரிக்க வேண்டுமென்பது குறித்து தலைமை நீதிபதி தான் முடிவெடுப்பார். எனவே இது தொடர்பாக தனி நீதிபதியிடம் முறையிட வேண்டும். குற்ற விசாரணை முறை தொடர்புடைய வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தனி நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்த வழக்கை எப்படி விசாரிக்க முடியும்?' என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த மனுவில் உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறி ஒத்தி வைத்தனர்.
கருத்துகள்