தமிழ்நாடு தேர்தல் ஆணையம் நடத்திய அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டத்தில்
அஇஅதிமுக சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு மூலம் தற்போது மாவட்டச் செயலாளர் கோவை செல்வராஜ் பங்கேற்றார். அவர் அருகிலிருந்த அஇஅதிமுக பெயர் பலகையை எடப்பாடி கே.பழனிசாமி ஆதரவாளரான முன்னால் அமைச்சர் டி.ஜெயக்குமார் தன் அருகே எடுத்து வைத்தார்.
ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் பணிகள் குறித்து விவாதிக்க அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சியின் பிரதிநிதிகளுடன் மாநில அளவில் தலைமை தேர்தல் அதிகாரியும், மாவட்ட அளவில் மாவட்டத் தேர்தல் அதிகாரிகளான மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டுமென இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை யடுத்து, அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு அரசியல் கட்சிகளுக்கு இன்று (ஆகஸ்டு மாதம் 1 ஆம் தேதி) காலை தலைமைச் செயலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் துவங்கியது.
கூட்டம் துவங்குவதற்கு முன்பாக முதலில் அஇஅதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தின் பிரதிநிதியாக கோவை செல்வராஜ் வந்தமர்ந்தார். அதன்பிறகு, எடப்பாடி கே.பழனிசாமியின் பிரதிநிதிகளாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மற்றும் முன்னால் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனும் பங்கேற்றனர். ஆனால், இந்த இருதரப்பு கருத்துகளும் அஇஅதிமுக.,வின் கருத்தாகவே ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. கூட்டத்தின் போது கோவை செல்வராஜ் அருகே இருந்த 'அதிமுக' என்னும் பெயர் பலகையை தூக்கிய டி.ஜெயக்குமார் தனக்கருகில் வைத்துக்கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதியும், பாஜக சார்பில் கரு.நாகராஜன், மற்றும் கராத்தே தியாகராஜன், காங்கிரஸ் சார்பில் தாமோதரன், மற்றும் நவாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏழுமலை, மற்றும் பெரியசாமி பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பன்னீர்செல்வம் தரப்பில் அவரது ஆதரவாளரான கோவை செல்வராஜ் கலந்து கொண்டுள்ள நிலையில், தானும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரெனக் கூறிக் கொண்டு மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் பங்கேற்க முயன்றார். அவரை அங்குள்ள அதிகாரிகள் வெளியேற்றினர். எடப்பாடி கே பழனிசாமி தரப்பில் மட்டும் இருவர் கலந்துக்கொண்டுள்ள நிலையில், பன்னீர்செல்வம் தரப்பில் மட்டும் ஒருவர் மட்டும் தான் அனுமதியா என அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் வழங்கிய கடிதத்தில் கோவை செல்வராஜ் பெயர் மட்டுமே இடம் பெற்றிருந்ததாக தெரிவித்து அவரை வெளியேற்றினர்.
ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் : அதிமுக சார்பில் நானும், பொள்ளாச்சி ஜெயராமனும் தான் பங்கேற்றோம். ஓ.பன்னீர்செல்வத்தின் சார்பில் பங்கேற்ற கோவை செல்வராஜ் எந்த கட்சியின் பிரதிநிதி என்பதே தெரியவில்லை. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை நியமிக்க வேண்டும் என்பதே அதிமுக.,வின் கொள்கை. இவ்வாறு அவர் கூறினார்.
கோவை செல்வராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'அதிமுக ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வத்திற்கு தேர்தல் கமிஷன் கடிதம் எழுதியுள்ளது. அவர் சார்பில் நான் பங்கேற்றேன். அதிமுக சார்பில் இனி அனைத்து நிகழ்ச்சிகள், கூட்டங்களில் கலந்து கொள்வோம்,' எனத் தெரிவித்தார்
கருத்துகள்