சென்னை மெட்ரோ ரயில் திட்டம் மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி முறைக்கு உதாரணமாக விளங்குகிறது: மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் மத்திய மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி முறைக்கு உதாரணமாக விளங்குகிறது என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.
நந்தனத்தில் அமைக்கப்பட்டுள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்ட தலைமையகத்தை மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, தமிழக முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் ஆகியோர் இன்று திறந்துவைத்தனர். நவீன முறையில் கட்டப்பட்டுள்ள இந்த தலைமையகத்தை இருவரும் பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, நாடு முழுவதும் தற்போது 810 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் இயக்கப்படுவதாகவும் இது நாட்டுக்கு பெருமை அளிப்பதாகவும் கூறினார். மேலும், 1,000 கிலோமீட்டர் தொலைவுக்கான மெட்ரோ ரயில் பணிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர், நகர்ப்புற போக்குவரத்து முறையில் இது புரட்சிகரமானது என்றார். இதில் சென்னையில் மட்டும் இரண்டாவது கட்டமாக 112 கிலோமீட்டர் தொலைவுக்கான பணிகள் நடைபெறுவதாக அவர் குறிப்பிட்டார். மெட்ரோ ரயில் போக்குவரத்தைப் பயன்படுத்தும் முதன்மையான நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது என்றும் வெகுவிரைவில், மெட்ரோ ரயில் பயன்பாட்டில் ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளை இந்தியா விஞ்சும் என்றும் திரு ஹர்தீப் சிங் பூரி கூறினார்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதலாவது கட்டத்தில் 54 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில்கள் இயக்கப்படுவதும் பெருமளவிலான பயணிகள் இவற்றை பயன்படுத்துவதும் மகிழ்ச்சியளிக்கிறது என்றார். இந்த வழித்தடங்களில் கொவிடுக்கு முன்பிருந்த பயணிகளின் எண்ணிக்கையைவிட தற்போது 3 மடங்கு அதிகரித்திருப்பதாக அவர் கூறினார்.
கருத்துகள்