தமிழ்நாடு மாநில ஆளுநர் சித்தன்னவாசல் வருகையின்
இரத்துக்கு காரணம் நடந்த போராட்டமா ?புதுக்கோட்டை வருகையின் போது மாநில அமைச்சரின் விமர்சனம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக 34 வது பட்டமளிப்பு விழா நேற்று (29.01.2024) நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என். ரவி பங்கேற்று மாணவ மாணவியருக்குப் பட்டங்களை வழங்கியவரிடமிருந்து 134 பேர் முனைவர் (Phd) பட்டமும், 184 பதக்கம் பெற்ற பட்டதாரிகள் என 348 பேர் நேரடியாகப் பட்டம் பெற்றனர். காரைக்குடி வருகை தந்த
ஆளுநர் ஆர்.என்.ரவியை வரவேற்ற பல்கலைக்கழக ஆளுமைகளான குனசேகரன், பாண்டியன், சுவாமிநாதன்,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வருகைபுரிந்த
ஆளுநர் ரவியை அழகப்பா
பல்கலைக்கழக நிதி அதிகாரி பாண்டியன்; ஆட்சிக்குழு உறுப்பினர்கள் முனைவர்.குணசேகரன் மற்றும் முனைவர்.ஆர். சுவாமிநாதன்;
ஆகியோர் கும்பிட்டுப் பாரம்பரிய முறைப்படி வருக! வருகவென வரவேற்றனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா, காவல்துறைக் கண்காணிப்பாளர் அரவிந்தன், துணைவேந்தர் முனைவர் க. ரவி; ஆகியோர் பூக்கொத்துக் கொடுத்து வரவேற்றனர்.
அதன்பின் புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலுக்கு நேற்று மதியம் 02.45 மணிக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வருவதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஆளுநரின் நேரமின்மை காரணமாக இந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுவதாக புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் ஆளுநரின் வருகையை எதிர்த்து புதுக்கோட்டையில் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.அவருக்கு எதிராக ஆளும் திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருந்த நிலையில் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்றிருந்தார். ஆனால் அங்கு தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர் எஸ்.இராஜகண்ணப்பன் பங்கேற்கவில்லை. அமைச்சர் நிகழ்ச்சிக்கு வருவதாக அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்த நிலையில், அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ஏற்கெனவே மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அப்போதைய உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி பங்கேற்காமல் புறக்கணித்தார். இதே போல் ராஜகண்ணப்பனும் இந்த நிகழ்வை புறக்கணித்துள்ளார்.ஆளுநர் சித்தன்னவாசல் ஓவியங்களை பார்வையிட இருந்தார். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காலை முதல் ஆளுநர் வரும் வழியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சியின் நபர்கள் கருப்புக்கொடி மற்றும் பலூனை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதில் கந்தர்வக்கோட்டை சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரையும் பங்கேற்றார்.
போராட்டம் தீவிரமாக நடைபெற்ற நிலையில், ஆளுநர் சித்தன்னவாசல் பயணத்தை ரத்து செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியாகின. ஆனால் நேரமின்மையால் இந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிற நிலையில் மாவட்டத்தைச் சேர்ந்த மாநில. சட்டத்துறை அமைச்சரும் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான எஸ். ரகுபதி ஆளுநருக்குப் பதில் அறிக்கை. செய்தியாளர்களிடம் வெளியிட்ட செய்தியில் "கேரளம், தெலங்கானா, தமிழ்நாடு ஆளுநர்களுக்கு இடையே யாருடைய பெயர் ஊடகங்களில் அதிகம் வருகிறது என மறைமுகப் போட்டி நடக்கிறது"
ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு 'மீடியா மேனியா' நோய் தாக்கியுள்ளதைப் போலத் தெரிகிறது. தினந்தோறும் தன்னைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி வரவேண்டும் எனச் செயல்பட்டு வருகிறார். அதிலும் குறிப்பாகத் தென் மாநிலங்களில் உள்ள கேரள ஆளுநர் ஆரீப் முகமது கான், தெலங்கானா ஆளுநர் தமிழிசை, தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகிய மூவருக்கும் தங்களுக்குள் யாருடைய பெயர் அதிகமாக மீடியாக்களில் வருகிறது என்ற மறைமுகப் போட்டியே இருப்பது போலத் தெரிகிறது. மாநில அரசின் மீது விமர்சனம் செய்து அதன் மூலம் ஊடக வெளிச்சம் பெறவே இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மூவரும் தாங்கள் ஆளுநர் என்பதையே மறந்து, பா.ஜ.கட்சியால் அனுப்பப்பட்ட அந்தந்த மாநில செய்தித் தொடர்பாளர்களைப் போல நடந்து கொள்கிறார்கள்.
நேற்று முன் தினம் நாகப்பட்டினம் சென்ற ஆளுநர், அதன்பிறகு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். நாகை மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தைப் பற்றி விமர்சித்துள்ளார். வீடுகள் சரியில்லை என்றும் இதற்குக் காரணம் தமிழ்நாடு அரசின் நிர்வாக அக்கறையின்மை என்றும், ஊழல் என்றும் வாய்க்கு வந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்.
அரசு திட்டத்தில் ஏதாவது விளக்கம் தேவைப்பட்டால் அதுகுறித்துக் கேட்டறியலாம். அதை விட்டு விட்டு எதிர்க்கட்சியைப் போல மீடியாக்களில் விமர்சனம் செய்யக் கிளம்புவதுதான் ஒரு ஆளுநருக்கு அழகா?
எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ஊழல் என்று கூறுகின்றார்? வாய்க்கு வந்ததைப் பேசிடவும் எழுதிடவும் அவர் அட்ரஸ் இல்லாத ஆள் அல்லவே?
கீழ்வெண்மணி தியாகிகள் மணிமண்டபத்தையும் கொச்சைப்படுத்தி இருக்கிறார் ஆளுநர். குடிசைகளுக்கு மத்தியில் கான்கிரீட் கட்டுமானம் கட்டி இருக்கிறார்களாம். இது தியாகிகள் மற்றும் ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானமாம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நிலப்பிரபுத்துவ - ஜாதியவாத சக்திகளால் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் எழுப்பட்ட நினைவுச் சின்னம் அது. அத்தகைய கொடூர சம்பவத்தில் கொல்லப்பட்ட தியாகிகளைப் போற்றும் வகையில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்தச் சின்னத்தை அமைத்துள்ளது. இதில் என்ன குறை கண்டார் ஆளுநர்? சுற்றிலும் இருக்கிற குடிசைகளை அகற்றச் சொல்கிறாரா?
அயோத்தியில் இப்போது ஆயிரம் கோடியில் கோயில் கட்டி இருக்கிறார்கள். அயோத்தி நகர் இப்போது எப்படி இருக்கிறது என்பதை ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு முறை அங்கு போய் பார்த்துவிட்டு திரும்பட்டுமே. உலகத் தலைவர்கள் வரும்போது குஜராத் மாநிலத்து ஏழைகளின் வாழ்விடங்களை பச்சை 'ஸ்கிரீன்' போட்டு மறைத்ததை இந்த நாட்டு மக்கள் இன்னும் மறக்கவில்லை.
எந்தப் பணிக்காக வந்தாரோ, அதைவிட்டுவிட்டு அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறார் ஆர்.என்.ரவி.
'தமிழ்நாடு என்று சொல்லக் கூடாது, தமிழகம் என்றுதான் சொல்ல வேண்டும்' என்றார் ஆளுநர். வரலாற்றில் காலம் காலமாக இருக்கும் பெயரை மாற்றும் அதிகாரத்தை இவருக்கு யார் கொடுத்தது என்று சொன்னதும், அதனைத் திரும்பப் பெற்றுக் கொண்டார் ஆளுநர். சில நாட்களுக்கு முன்னால், 'மகாத்மா காந்தியால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை' என்றார். அதற்கு எதிர்ப்பு கிளம்பியதும், ' நான் அப்படிச் சொல்லவில்லை' என்று சொல்லி விட்டார்.
தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்த ஆர்.என்.ரவி அவர்கள், தமிழ்நாட்டின் நன்மைக்காக இதுவரை ஏதாவது செய்துள்ளாரா என்றால் இல்லை. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒன்றிய பா.ஜ.க அரசிடம் இருந்து ஏதாவது திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறாரா என்றால் இல்லை. குடும்ப வேலையாக அடிக்கடி டெல்லி செல்லும் அவர், தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைக்காக எப்போதாவது டெல்லி சென்றுள்ளாரா என்றால் இல்லை. அவர்தான், சொந்தமாக எந்த நன்மையும் செய்யவில்லை. நாட்டு மக்களுக்கு நன்மைகள் செய்யும் தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் அவர்களுக்கும் உதவியாக இருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. இடைஞ்சலாகவும், மாநிலத்துக்கு அதிக கெடுதல் செய்பவராகவும், கெடுதல் நினைப்பவராகவும் இருக்கிறார் ஆளுநர்.
ஆன்லைன் ரம்மி தடை சட்டமசோதாவுக்கு அனுமதி வழங்காமல் இழுத்தடித்தது முதல், ஊழல் மற்றும் நிதிமுறைகேடுகளில் சிக்கி கைதான சேலம் பல்கலைக் கழக துணைவேந்தரைக் காப்பாற்றும் நடவடிக்கைகள் வரை ஆளுநரின் அனைத்து நடவடிக்கைகளும் சர்ச்சைக்குரியதாக மட்டுமல்ல, சந்தேகத்துக்குரியதாகவும் அமைந்துள்ளன.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப் பட்ட சட்டமுன்வடிவுகளையும், உத்தரவுகளையும், கோப்புகளையும் பல மாத காலமாக ஊறுகாய்ப் பானையில் ஊற வைப்பதைப் போல கிண்டி மாளிகையில் ஊற வைத்துக் கொண்டு இருக்கிறார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டோம்.
"ஆளுநர் என்பவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர். அவர் பெயரளவில்தான் மாநிலத்தின் தலைவராக இருக்கிறார். ஆளுநர் என்பவருக்கு அரசியல் சட்டப்படி சில அதிகாரங்கள் தரப்பட்டுள்ளன. அந்த அதிகாரங்களை வைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவைகள் சட்டமியற்றும் வழக்கமான பணிகளை முறியடித்துவிட முடியாது" என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உறுதியாகத் தெரிவித்தார்கள். அதன்பிறகும் ஏதோ அதிகாரம் பொருந்தியவராக, தன்னை மன்னரைப் போல நினைத்துக் கொண்டு ஆளுநர் ரவி செயல்பட்டு வருகிறார்.
ஆளுநராக இருந்து அரசியல் செய்வதை விடுத்து, நேரடியாக அவர் அரசியல் களத்துக்கு வரலாம். அவரது அந்த ஆசைக்கு அகில இந்திய பா.ஜ.க தலைமை அனுமதி அளித்தால், 'அவருக்கும் நல்லது தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது' என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்