பொய் தகவல் மூலம் வாரிசுரிமைச் சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு எதிராக குற்ற வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை
பொய்யான தகவல்களுடன் வாரிசுரிமைச் சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு எதிராக குற்ற வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க மாநிலம் முழுவதுமுள்ள அனைத்து வருவாய் துறை அலுவலர்களுக்கும் 5 வாரங்களில் சுற்றறிக்கை பிறப்பிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோயமுத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாரண்ணன் தனது தந்தையின் மரணத்துக்குப் பின், இறப்புச் சான்றிதழ் வாங்கி பின்னர் வாரிசுரிமைச் சான்றிதழ் வழங்கக் கோரி மேட்டுப்பாளையம் வருவாய் வட்டாட்சியரிடம் விண்ணப்பித்துள்ளார். அதுகுறித்த விசாரணையில், மாரண்ணனின் தந்தை மாரண்ணக் கவுடருக்கு இரண்டு மகள்களும், இரண்டு மகன்களும் உள்ள நிலையில், தான் மட்டுமே தான் வாரிசு எனக்கூறி மாரண்ணன் விண்ணபித்துள்ளதாகக் கூறி, அவரது மனுவை நிராகரித்து வட்டாட்சியர் உத்தரவிட்டதன் காரணமாக உத்தரவை எதிர்த்து மாரண்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்த போது அரசுத் தரப்பில், “பொய்த் தகவல்களைக் கூறி, உண்மையை மறைத்து, வாரிசுரிமை சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பது இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றம்” என தெரிவிக்கப்பட்டதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ‘பொய்த் தகவல்களைக் கூறி வாரிசுரிமைச் சான்றிதழ் பெற்று, சொத்துக்களை பெயர் மாற்றம் செய்வதால், மற்ற வாரிசுகளின் உரிமை பறிக்கப்படுகிறது.உண்மைத் தகவல்களை மறைத்து வாரிசுரிமைச் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கப்படுவது தொடர்பான வழக்குகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. பொய்யான தகவல்களைக் கூறி வாரிசுரிமைச் சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு எதிராக
குற்ற வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக, அனைத்து வருவாய் துறை அதிகாரிகளுக்கும் ஐந்து வாரங்களில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்’ என தமிழ்நாடு வருவாய் நிர்வாகத் துறை ஆணையருக்கு உத்தரவிட்டார்.
மேலும், இதுபோன்ற குற்ற வழக்குத் தொடராமல் உடந்தையாகச் செயல்படும் வருவாய் அலுவலர்களுக்கு எதிராகவும் ஒழுங்கு நடவடிக்கை, மற்றும் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்