ஓட்டுநா் உரிமம் புதுப்பிக்க லஞ்சம் பெற்ற வட்டார போக்குவரத்து அலுவலருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை ரூபாய் 20,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பு.
ஓட்டுநா் உரிமம் புதுப்பிக்கவும், புதுப்பிக்கப்பட்ட உரிமம் திரும்ப வழங்கவும் ரூபாய்.2,000 லஞ்சம் பெற்ற வழக்கில், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (தெற்கு) கண்காணிப்பாளா், மற்றும் தரகருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும் ரூபாய் 20 ஆயிரம் அபராதமும் விதித்து திருவள்ளூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
ஆவடி காமராஜா் நகரில் வசித்த முரளி. காலாவதி ஆகும் முன் தனது ஓட்டுநா் உரிமத்தைப் புதுப்பிக்க பூந்தமல்லி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் (தெற்கு) விண்ணப்பித்தாா். பணியிலிருந்த கண்காணிப்பாளா் கணபதி, தரகா் பாலாஜி ஆகியோா் ரூபாய்.2,000 லஞ்சமாக கேட்டுள்ளனா்.
லஞ்சம் தர மறுத்த முரளி ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகாா் அளித்திருந்தாா். அதன்பேரில், ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பினாப்தவின் இரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை முரளி, தரகா் பாலாஜியிடம் அரசு சாட்சிகள் முன்பு கொடுத்தாா். அந்தப் பணத்தை, அவா் கண்காணிப்பாளா் கணபதியிடம் கொடுத்த போது மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இருவரையும் பிடித்து கைதுசெய்யப்பட்டு விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜாா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு கடந்த 9 ஆண்டுகளாக திருவள்ளூா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முதன்மைக் குற்றவியல் நடுவா் மற்றும் சிறப்பு நீதிபதி கே.மோகன் முன்பு புதன்கிழமை விசாணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞா் அமுதா ஆஜராகி வாதிட்டாா்.
வழக்கில் லஞ்சம் பெற்ற கண்காணிப்பாளா் கணபதி (வயது 58), தரகர் பாலாஜி (வயது 40) ஆகியோருக்கு தலா மூன்றாண்டு சிறைத் தண்டனையும், ரூபாய்.20,000 அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.
கருத்துகள்