பாரதிய ஜனதா கட்சியை வைத்து ஆர் எஸ் எஸ் சை எடை போடுவது பெரிய தவறு என சர் சங்க சாலக் மோகன் பாகவத் கருத்து
: “பாரதிய ஜனதா கட்சியை வைத்து ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைப் புரிந்து கொள்ள முயற்சிப்பது மிகப்பெரிய தவறு. அதன் சீருடை மற்றும் பயிற்சிகளை வைத்து துணை ராணுவப்படை என யாரும் அனுமானிக்க வேண்டாம்,” என, RSS அமைப்பின் தலைவர் அல்லது சர் சங்க சாலக் மோகன் பாகவத் கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஆர் எஸ் எஸ் அமைப்பில் சீருடை அணிகிறோம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் அணிவகுப்பு நடத்துகிறோம் . கம்பு வைத்து பயிற்சிகள் செய்கிறோம். இதை வைத்து ஆர்.எஸ்.எஸ்., ஒரு துணை ராணுவப் படையோ எனக் கருதினால், அது மிகப்பெரிய தவறு.
ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தை புரிந்து கொள்வது மிகவும் கடினம். அது ஒரு தனித்துவமான அமைப்பு. பா.ஜ., வழியாக ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை புரிந்து கொள்ள முயற்சிப்பதும் தவறானது. கிளை அமைப்பான வித்யா பாரதி வழியாக ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை அணுகுவதும் தவறானது.
சரியான தகவலைத் தெரிந்து கொள்ள, தற்போதுள்ள மக்கள் அதிக முயற்சிகளை எடுப்பதில்லை. மூலத்தை அறிய வேண்டுமென்ற ஆவல் அவர்களிடமில்லை. எதற்கெடுத்தாலும், 'விக்கிபீடியா' உதவியை நாடுகின்றனர்.
அதிலிருக்கும் தகவல் அனைத்துமே உண்மையில்லை. ஆர்.எஸ்.எஸ்., பற்றி அறிய வேண்டுமெனில், அதைப் பற்றி உண்மையாக அறிந்தவர்களிடம் மட்டுமே கேட்க வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ்., ஸ்வயம் சேவகர்களை வளர்க்கிறது. பாரதத்தின் வளர்ச்சிக்கான லட்சியங்கள், சிந்தனைகள் மற்றும் மதிப்புகளை அவர்களுக்கு எடுத்தூட்டுகிறது.
ஆனால், துாரத்தில் இருந்தபடி, 'ரிமோட் கன்ட்ரோல்' போல ஒருபோதும் ஸ்வயம் சேவகர்களை ஆர்.எஸ்.எஸ்., இயக்கியதில்லை.
தேசப்பற்று மிகுந்த சூழலை உருவாக்கும் தேச அபிமானிகளை, தன் கிளை அமைப்புகள் மூலம் ஆர்.எஸ்.எஸ்., வளர்த்தெடுத்து வருகிறது.
ஒரு விஷயத்தை எதிர்க்கவோ அல்லது எதிர்வினையாற்றவோ ஆர்.எஸ்.எஸ்., உருவாகி இருக்கலாம் என்ற கருத்து பரவலாகவே உலவுகிறது. ஆனால், அது உண்மையல்ல.
ஆர்.எஸ்.எஸ்., பற்றி என் கருத்துகளைக் கூறிவிட்டேன். புரிந்துகொள்ள வேண்டுமெனில் இயக்கத்திற்குள் வந்து பாருங்கள். இனிப்பு பற்றி இரண்டு மணி நேரம் உபதேசம் செய்தாலு.ம், அதன் சுவையை உணர முடியாது. அதை அள்ளிச் சாப்பிட வேண்டும். அப்போது தான் சுவை தெரியும். என அவர் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

கருத்துகள்