தமிழ்நாடு கிராம ஊராட்சிகளுக்கான திறன் மேம்பாட்டிற்கு கௌரவ ஆலோசகர் நியமனம் !
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை G.O.(1D) No.399 / 02.09.2026 ன்படி மறைமலைநகர் மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சியியல் நிறுவனம் (SIRD) சார்பில், கிராம ஊராட்சிகளின் திறன் மேம்பாட்டிற்காக முன்னாள் பேராசிரியர் டாக்டர் ஜி. பழனித்துரை கௌரவ ஆலோசகராக தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருககு மாதம் ரூபாய் 1 லட்சம் கௌரவ ஊதியம் வழங்கப்படும். SIRD-ன் Training Corpus Fund மூலம் கௌரவ ஊதியம் வழங்கப்படும்.
கிராம ஊராட்சிகளின் திறன் மேம்பாடு தொடர்பான பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்குவார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் மற்றும் தொடர்புடைய செயல்பாடுகளில் தொழில்முறை ஆலோசனை வழங்குவார்.
கிராம ஊராட்சிகளின் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.பேராசிரியர் டாக்டர் ஜி. பழனித்துரை இந்தியாவின் பஞ்சாயத்து ராஜ் அமைப்பு, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகத் துறைகளில் மிகச்சிறந்த வல்லுநராகவும், கல்வியாளராகவும் அறியப்படுபவர் ஆவார். திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் மற்றும் வளர்ச்சி நிர்வாகத் துறையின் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் சுமார் 34 ஆண்டுகளுக்கும் மேலாக பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும், டீன் (Dean) போன்ற பல்வேறு முக்கியப் பொறுப்புகளிலும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.
இந்தியாவின் அடித்தள ஜனநாயகம், கிராம சுயராஜ்யம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்துவதில் தீவிரமாக இயங்கி வரும் முதன்மைச் செயற்பாட்டாளர் ஆவார். உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு (குறிப்பாகப் பெண்களுக்கு) அதிகாரமளித்தல் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்குவதில் முக்கியப் பங்காற்றியுள்ளார்70-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.சர்வதேச மற்றும் தேசிய அளவிலான முதன்மை இதழ்களில் 160-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.இவரது முக்கிய நூல்களில் 'புதிய பாதை புதிய தலைமை', 'நமது ஊர் நமது பொறுப்பு', மற்றும் 'வான் திறந்த வெளிச்சம்' ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.




கருத்துகள்