*பரமக்குடியில் சோகம்: ஆட்டோ ஓட்டுநர்கள் மோதலை தடுத்த பெண் தலைமை காவலர் கண்ணகி தள்ளிவிட்டு கொலை!
- பரபரப்பு!*
*ராமநாதபுரம்:* பரமக்குடியில் பயணிகளை ஏற்றுவதில் ஆட்டோ ஓட்டுநர்களிடையே ஏற்பட்ட மோதலை தடுக்கச் சென்ற பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
*என்ன நடந்தது?*
பார்த்திபனூர் காவல் நிலையத்தில் பெண் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் *திருமதி. கண்ணகி (வயது 35)*. இவருக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது. நேற்று (28.09.2026) இரவு பரமக்குடி அரசு மருத்துவமனை புறக்காவல் நிலைய பாதுகாப்பு பணியில் இருந்தார்.
நேற்று இரவு சுமார் 8 மணியளவில், வெளியே பயணிகள் ஏற்றுவது தொடர்பாக சண்டையிட்டுக் கொண்டு காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர். மருத்துவமனை வளாகத்திற்குள்ளும் இரு தரப்பினரும் மீண்டும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அங்கு பணியில் இருந்த காவலர் கண்ணகி, சண்டையை தடுக்கச் சென்றுள்ளார். அப்போது மோதலில் ஈடுபட்ட *கருப்புராஜா (சிவகங்கை மாவட்டம் குமாரக்குறிச்சி)* என்பவர் பெண் காவலர் கண்ணகியை தள்ளிவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளார்.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கண்ணகிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார். உடனடியாக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், *சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.*
*போலீஸ் நடவடிக்கை:*
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு. சந்தீஷ்*, பரமக்குடி DSP சுகுமாரன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக பரமக்குடி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய கருப்புராஜாவை தேடி வந்த நிலையில், அவரை கைது செய்துள்ளதாக தகவல். மேலும் கல்யாணசுந்தரம் என்பவரும் கைது. மருத்துவமனை CCTV காட்சிகள் அடிப்படையில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடமையை செய்யச் சென்ற பெண் காவலர் உயிரிழந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ---


கருத்துகள்