மலப்பம்பாடி ஏரியில் ரூ.8 கோடி மண் கொள்ளை - முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மகன் குமரன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு!
திருவண்ணாமலை மாவட்டம் மலப்பம்பாடி ஏரியில் இருந்து ரூ.8.22 கோடி மதிப்பிலான மண் சட்டவிரோதமாக அள்ளப்பட்டதாக அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் பேரில், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகன் எ.வ.குமரன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
கடந்த 2025 டிசம்பர் 14-ம் தேதி மலப்பம்பாடியில் நடந்த திமுக வடக்கு மண்டல இளைஞரணி மாநாட்டிற்காக 'கலைஞர் திடல்' அமைக்க, அருகில் உள்ள ஏரியில் இருந்து மண் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு.
விதிகளின்படி ஏரியில் 1 மீட்டர் வரை மட்டுமே மண் எடுக்க அனுமதி உண்டு. ஆனால் 12 ஏக்கர் பரப்பளவில் 10 முதல் 23 அடி (3 முதல் 7 மீட்டர்) ஆழத்திற்கு தோண்டி, சுமார் 45,72,058 கன அடி மண் அள்ளப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ரூ.8,22,97,044 இழப்பு ஏற்பட்டுள்ளதாக FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மண் அனைத்தும் எ.வ.குமரனுக்கு சொந்தமான அருணை புராடக்ட்ஸ் அண்ட் சர்வீசஸ் நிறுவன நிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்கு வருவாய்த்துறை, புவியியல் மற்றும் சுரங்கத்துறையிடம் எந்த அனுமதியும் பெறவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அறப்போர் இயக்கம் கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி அளித்த புகாரின் பேரில், செப்டம்பர் 24-ஆம் தேதி இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேட்டில் எ.வ.வேலு மீது வழக்கு உள்ள நிலையில், இது இரண்டாவது வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
---







கருத்துகள்