ஐஐஎஸ் அதிகாரிகள், நிர்வாகத்துக்கும் மக்களுக்கும் இடையே முக்கிய இணைப்பாகத் திகழ்கிறார்கள்: தகவல் ஒலிபரப்புத் துறைச் செயலாளர் திரு சஞ்சல் குமார்
இந்திய மக்கள் தொடர்பு நிறுவனமான ஐஐஎம்சி, இன்று (01.09.2026) 2009, 2023, 2024 தொகுப்புகளைச் சேர்ந்த இந்திய தகவல் பணி (ஐஐஎஸ்) குரூப் ‘ஏ’ பயிற்சி அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு விழாவையும் பட்டமளிப்பு விழாவையும் நடத்தியது.
ஐஐஎம்சி ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாறிய பிறகு முதன்முறையாக ஐஐஎஸ் பயிற்சிப் பெறுபவர்களுக்கு முதுகலைப் பட்டங்களை வழங்கியதன் மூலம், இந்த விழா ஐஐஎம்சி-க்கும் இந்தியத் தகவல் பணிக்கும் ஒரு வரலாற்று மைல்கல்லாக அமைந்தது.
இந்த விழாவில், தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சல் குமார் பேசுகையில், மக்கள் தொடர்பு என்பது நிர்வாகத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும் என்றார். அது மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப பரிணமிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். தவறான தகவல்கள், செயற்கையாக உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் ஆகியவை புதிய சவால்களை உருவாக்கும் அதே வேளையில், செயற்கை நுண்ணறிவு ஒரு சிறந்த திருப்புமுனையாகவும் உருவெடுத்து வருகிறது என்று அவர் கூறினார். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து அதிகாரிகள் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். தகவல் தொடர்பில் வேகமும், துல்லியமும் நம்பகத்தன்மையும் சமரசம் செய்ய முடியாதவை என்று அவர் கூறினார். ஐஐஎஸ் அதிகாரிகள், நிர்வாகத்துக்கும் மக்களுக்கும் இடையே முக்கிய இணைப்பாகத் திகழ்கிறார்கள் என்று திரு சஞ்சல் குமார் தெரிவித்தார்.
இவ்விழாவில், தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு பிரபாத், இணைச் செயலாளர் திரு கே.கே. நிராலா, பயிற்சித் துறை தலைமை இயக்குநர் திரு எல். மது நாக், பிற அதிகாரிகள், பேராசிரியர்கள், பயிற்சி அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.



கருத்துகள்