பாலக்காட்டு மண்ணில், பல்லசேனா என்ற சிறிய கிராமத்தில் 1926-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி பிறந்தார் ஒரு சிறுவன். பெயர் பாச்சுவீட்டில் பாலசுப்பிரமணியன் மேனன்.
1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, அவர் பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் பட்டதாரி. பின்பு சென்னை சட்டக் கல்லூரிக்கு சென்றார். 1950-ல், தன் 24-வது வயதில், கருப்பு கோட்டை மாட்டிக்கொண்டு பாலக்காடு மாவட்ட நீதிமன்றத்தில் முதன்முதலாக வாதாடத் தொடங்கினார்.
அன்று ஆரம்பித்த அவரது பயணம், இன்று வரை நிற்கவில்லை.
இடையில் எத்தனையோ தலைமுறை வழக்கறிஞர்கள் வந்தார்கள், போனார்கள். நீதிபதிகள் மாறினார்கள். சட்டங்கள் மாறின. ஆனால் மேனன் மட்டும் அதே நீதிமன்ற வளாகத்தில், அதே கருப்பு கோட்டுடன் நின்றார்.
2023-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி, உலகமே அவரை திரும்பிப் பார்த்தது. *73 ஆண்டுகள் 60 நாட்கள்* வழக்கறிஞராக பணியாற்றி, கின்னஸ் உலக சாதனை படைத்தார். இதற்கு முன் ஜிப்ரால்டர் நாட்டைச் சேர்ந்த லூயிஸ் ட்ரையே என்பவரின் 70 ஆண்டு சாதனையை தகர்த்தார்.
அப்போது நிருபர்கள் அவரிடம் கேட்டார்கள், "எப்போது ஓய்வு பெறுவீர்கள்?"
98 வயதான அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்:
*"நான் ஓடிக்கொண்டிருக்கிறேன் 98. ஓய்வு பற்றி நான் நினைப்பதே இல்லை. இப்போதும் நான் உழைத்து தான் சாப்பிடுகிறேன். என் உடல் அனுமதிக்கும் வரை, என் கட்சிக்காரர்கள் என்னை நம்பும் வரை, நான் வாதாடுவேன்."*
இப்போது 2026. அவருக்கு வயது 100.
கடந்த வாரம், அக்டோபர் 10-ம் தேதி, கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு வரலாற்று நிகழ்வு நடந்தது. தலைமை நீதிபதி சௌமன் சென் அவர்கள் முன்முயற்சி எடுத்து, அக்டோபர் 15-ம் தேதி வரும் அவரது 100-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு *"மூத்த வழக்கறிஞர்" (Senior Advocate)* என்ற உயரிய பட்டத்தை வழங்கினார்.
சாதாரணமாக இந்த பட்டம் உயர் நீதிமன்றத்திலேயே வாதாடுபவர்களுக்கு தான் கிடைக்கும். மாவட்ட நீதிமன்றத்தில் (Moffusil Court) மட்டுமே 76 ஆண்டுகளாக வாதாடி வரும் ஒருவருக்கு இந்த பட்டம் கிடைப்பது, கேரள வரலாற்றிலேயே முதல் முறை.
பிரதமர் நரேந்திர மோடி கூட அவருக்கு வாழ்த்து அனுப்பினார், "உங்கள் சேவை தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும்" என்று.
100 வயதிலும் தினமும் காலையில் கருப்பு கோட்டை மாட்டிக்கொண்டு, தன் பழைய ஸ்கூட்டரிலோ, மகனின் துணையுடனோ நீதிமன்றத்திற்கு செல்கிறார் மேனன்.
சட்டம் என்பது அவருக்கு தொழில் அல்ல. அது தான் அவரது வாழ்க்கை. அவரது மூச்சு.
*இவர் தான் இந்திய வழக்கறிஞர் சமூகத்தின் வாழும் புராணம் - பாலசுப்பிரமணியன் மேனன்.*


கருத்துகள்