ஊழல் செய்து சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்தால்தான் அதிகாரிகளுக்கு அச்சம் ஏற்படும் -உயர்நீதிமன்றம்
---
*ஊழல் செய்து சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்தால்தான் அதிகாரிகளுக்கு அச்சம் ஏற்படும் - ஐகோர்ட் கிளை நீதிபதி புகழேந்தி கருத்து*
ஊழல் செய்து சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்தால் தான் அதிகாரிகளின் மனதில் அச்சத்தை ஏற்படுத்த முடியும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பி.புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
திருச்சிராப்பள்ளியைச சேர்ந்த முன்னாள் சார் பதிவாளர் வி.தங்கவேல் தாக்கல் செய்த மனுவை விசாரித்த போதே இந்த கருத்தை தெரிவித்தார்.
*வழக்கின் பின்னணி:*
திருச்சிராப்பள்ளியை சேர்ந்த சார் பதிவாளர் வி.தங்கவேல் மற்றும் அவரது மனைவி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் திருச்சிராப்பள்ளி நீதிமன்றம் 2024-ஆம் ஆண்டு அவர்களுக்கு சிறை தண்டனை விதித்து, அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டது.
இதில் மூன்றாம் தரப்பினராக தனது சொத்தும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறி, திருச்சியை சேர்ந்த கவேல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். "எனது சொத்தை பறிமுதல் செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று அதில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
ஊழல் மற்றும் ஊழல் நடைமுறைகள் வேறு எந்த குற்றத்தையும் விட மிகவும் தீவிரமாக கருதப்பட வேண்டும். நமது சமூகத்தின் ஒவ்வொரு பகுதியையும் பாதித்துள்ள ஊழல் எனும் தீய பழக்கத்தை எதிர்த்து போராடுவதற்கு, சொத்து பறிமுதல் செய்வதும் அவசியமாகும்.
1988-ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ள ஊழல் தடுப்புச் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஊழல் வழிகளில் பெறப்பட்டதாக நம்பப்படும் சொத்துக்களை கட்டாயமாக பறிமுதல் செய்யும் வகையில் சட்டம் திருத்தப்பட வேண்டும்.
இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டால் மட்டுமே, அரசு ஊழியர்கள் ஊழல் செய்வதற்கு அச்சம் கொள்வார்கள். இல்லையெனில் சட்டப்பிரிவுகள் வெறும் காகிதத்திலேயே எஞ்சியிருக்கும்.
இது தொடர்பாக அரசு முன்முயற்சி எடுத்து உரிய சட்டத் திருத்தங்களை அறிமுகப்படுத்தும் என நம்புகிறேன்.
அதே சமயம், இந்த வழக்கில் மனுதாரர் மூன்றாம் தரப்பு என்பதால், அவரது சொத்தை பறிமுதல் செய்த கீழமை நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டுள்ளார்.
---

கருத்துகள்