--- *இனி மாநகராட்சி கூட்டத்தில் மேயருக்கு மட்டும் தான் மேடையில் இடம்! MLA, MP, கவுன்சிலர்கள் எங்கே அமர வேண்டும்? - கூடுதல் தலைமை செயலாளர் கடிதம்!*
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்ற கூட்டங்களில் தொடரும் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மிக முக்கியமான 6 அம்ச புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
*கூடுதல் தலைமை செயலாளர் கடிதத்தின் படி 6 அம்ச உத்தரவுகள்:*
*1. மேடையில் (Dias) யாருக்கு இடம்?*
மாமன்ற / நகர்மன்ற / பேரூராட்சி தலைவர் (மேயர்) நடுவில் அமர வேண்டும். அவருக்கு அருகில் துணை மேயர் / துணை தலைவர் அமர வேண்டும். அதற்கு அருகில் மாநகராட்சி ஆணையர் / நகராட்சி ஆணையர் / செயல் அலுவலர் அமர வேண்டும். இவர்கள் தவிர வேறு யாரும் மேடையில் அமரக்கூடாது!
*2. MLA, MP, வார்டு உறுப்பினர்களுக்கு எங்கே இடம்?*
நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள் / நியமன உறுப்பினர்களுக்கு மன்ற அரங்கில் தனி இடம் ஒதுக்கி அமர வைக்க வேண்டும். அவர்களை நிற்க வைத்தோ அல்லது அவமதிக்கும் வகையிலோ நடத்தக்கூடாது.
*3. முறையான இடவசதி கட்டாயம்:*
மன்ற உறுப்பினர்களை வார்டு எண் அடிப்படையில் அமர வைக்கலாம். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கும் கட்டாயம் இருக்கை வழங்க வேண்டும்.
*4. பத்திரிகையாளர்களுக்கும் இடம்:*
மன்ற நடவடிக்கைகளை கவனிக்க வசதியாக பத்திரிகையாளர்களுக்கு போதுமான இடவசதி செய்து தரப்பட வேண்டும்.
*5. பார்வையாளர்களுக்கு:*
மன்ற தலைவரின் முன் அனுமதி பெற்ற பார்வையாளர்கள், மன்ற உறுப்பினர்களின் வரிசைக்கு பிறகு, இடவசதிக்கேற்ப அமர வைக்கப்பட வேண்டும். மக்களை காத்திருக்க வைக்கக்கூடாது.
*6. உடனடி அமல்:*
இந்த வழிமுறைகளை அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளும் உடனடியாக பின்பற்ற வேண்டும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் இனி உள்ளாட்சி மன்ற கூட்டங்களில் நடக்கும் அதிகார மோதல், இடப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ---



கருத்துகள்