தேர்தல் ஆணையர் உள்ளிட்ட விவகாரங்களில் நேரில் சந்திக்க முடியாது - ராகுல், கார்கேவுக்கு தலைமை நீதிபதி பதில்
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்து நேரில் சந்திக்க நேரம் கேட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு தலைமை நீதிபதி சூர்ய காந்த் பதில் கடிதம் எழுதியுள்ளார்.
*அக்டோபர் .11-ம் தேதி தலைமை நீதிபதி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:*
அக்டோபர் 10-ம் தேதி நீங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது. அதில் அக்டோபர் 12 திங்கட்கிழமை மாலை 4 முதல் 5 மணிக்குள் சந்திக்க நேரம் கேட்டிருந்தீர்கள்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரச்சினைகள்:
1. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையம் தொடர்பான பிரச்சினைகள்
2. மாணவர்கள் தன்னிச்சையாக கைது செய்யப்பட்ட விவகாரம்
3. மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்ட விவகாரம்
4. ரயில்கள் ரத்து செய்யப்பட்ட விவகாரம் உள்ளிட்டவை
நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரச்சினைகள் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளாக உள்ளன. இப்படிப்பட்ட வழக்குகள் குறித்து உங்களுடன் நேரில் சந்தித்து பேசினால் அது நீதிமன்ற செயல்பாடுகளில் தலையிடுவது போன்ற சூழ்நிலையை உருவாக்கும். நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டிய விஷயங்களை நீதிமன்றத்தில்தான் பேச வேண்டும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி உச்ச நீதிமன்றத்திற்கு நிர்வாக அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. ஆனால் அரசியலமைப்பு 32-வது பிரிவு மற்றும் பிற அதிகாரங்களின்படி எந்தவொரு பிரச்சினையையும் விசாரித்து நீதி வழங்க முடியும்.
எனவே நேரில் சந்தித்து மனு அளிப்பதற்கு பதிலாக உச்ச நீதிமன்றத்தில் முறையாக மனு தாக்கல் செய்வதே சரியான வழி. நீங்கள் குறிப்பிட்டுள்ள சில விவகாரங்கள் அக்டோபர் 13 செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வர உள்ளன. விரும்பினால் அக்டோபர் 12 திங்கட்கிழமை காலை 10.30 முதல் மாலை 4.30 வரை நேரிலோ அல்லது இணையதளம் மூலமாகவோ எந்த நேரத்திலும் மனு தாக்கல் செய்யலாம்.
நீங்கள் தாக்கல் செய்யும் மனு சட்ட விதிகளின்படி விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உறுதியளிக்கிறேன்."
இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




கருத்துகள்