---*கலிபோர்னியாவில் "மருதிருவர்" நாட்டிய நாடகம் பிரம்மாண்ட அரங்கேற்றம்*
*பிரிமாண்ட், கலிபோர்னியா:*
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீர முழக்கமிட்ட மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் வரலாறு, அமெரிக்க மண்ணில் அரங்கேற்றப்பட்டு, புலம்பெயர் தமிழர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் நான்காவது பெரிய மாநகரான Fremont நகரில் செயல்பட்டு வரும் *பாரதி தமிழ் சங்கம்*, கடந்த அக்டோபர் 11-ம் தேதி, Hayward நகரில் உள்ள HUSD கலையரங்கத்தில் *"மருதிருவர்"* எனும் வரலாற்று நாடகத்தை மிக பிரம்மாண்டமான முறையில் நடத்தியது.
மதுரையை சேர்ந்த புகழ்பெற்ற நாட்டிய ஆசிரியர் *கலைமாமணி திரு. ஆர்.முரளிதரன்* அவர்களின் வழிகாட்டுதலிலும், நெறியாள்கையிலும் உருவான இந்த வரலாற்று காப்பியத்தில், *School of India Dance* பள்ளி மாணவர்கள் பங்கேற்று, மருது சகோதரர்களின் தியாகத்தையும், வீரத்தையும் கண்முன் கொண்டு வந்தனர்.
*வரலாற்று சிறப்பு:*
1801-ல் ஆங்கிலேயருக்கு எதிராக முதன்முதலில் "ஜம்பு தீவு பிரகடனம்" வெளியிட்டு, இந்திய விடுதலைக்கு வித்திட்டவர்கள் மருது பாண்டியர்கள். அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தமிழகத்தை தாண்டி, அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் உள்ள Fremont மாநகரில் அரங்கேற்றியது, உலகத் தமிழர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
"திரைகடல் ஓடி திரவியம் தேடு என்ற நம் முன்னோர் வாக்கிற்கு இணங்க, பொருள் தேடி கடல் கடந்து வாழ்ந்தாலும், நம் வீர வரலாற்றை மறக்காமல், அடுத்த தலைமுறைக்கு கடத்தும் இந்த முயற்சி போற்றுதலுக்குரியது" என அங்கு கூடியிருந்த தமிழ் ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இந்த நாடகத்தை சிறப்பாக ஏற்பாடு செய்த பாரதி தமிழ் சங்க நிர்வாகிகள், கலைமாமணி முரளிதரன் அவர்கள் மற்றும் பங்கேற்ற அனைத்து கலைஞர்களுக்கும் உலகத் தமிழர்கள் சார்பாக நன்றிகளும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. ---





கருத்துகள்