---*பப்ளிக் ஜஸ்டிஸ் - எக்ஸ்க்ளூசிவ்*
எல்லை மறுசீரமைப்பு மசோதா: காங்கிரஸ் தேதி தரவில்லை - கார்கேவுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பதில் கடிதம்!
*புதுடெல்லி, அக்டோபர் .19:* எல்லை மறுசீரமைப்பு (Delimitation) அரசியல் சாசன திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்திற்கு, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் *கிரண் ரிஜிஜு* பதில் கடிதம் எழுதியுள்ளார்.
*கடித எண்: 72/HMPA/2026, தேதி: 19.10.2026*
*கடிதத்தில் கூறியிருப்பதாவது:*
*1. நாடாளுமன்றம் ஒத்திவைப்பு குறித்து விளக்கம்:*
13 ஆகஸ்ட் 2026 அன்று நாடாளுமன்றம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு 64 நாட்கள் ஆகியும் இன்னும் கலைக்கப்படவில்லை (Prorogue) என்று கார்கே குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள ரிஜிஜு,
"ஒரு அவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு குறிப்பிட்ட காலத்திற்குள் கலைக்க வேண்டும் என்ற அரசியல் சாசன நிபந்தனை எதுவும் இல்லை. இது அரசியல் சாசன மீறல் அல்ல. 2008-ல் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது 87 நாட்கள், 1987-ல் 76 நாட்கள், 1989-ல் 54 நாட்கள், 2006 மற்றும் 2013-ல் 49 நாட்கள் என நீண்ட நாட்கள் அவை கலைக்கப்படாமல் இருந்த வரலாறு உண்டு" என்று விளக்கியுள்ளார்.
*2. காங்கிரஸ் தேதி தரவில்லை:*
"எல்லை மறுசீரமைப்பு திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சியின் ஆதரவை கோரி நான் உங்களுக்கு மார்ச் 16, மார்ச் 26, ஏப்ரல் 12, 2026 ஆகிய தேதிகளில் கடிதம் எழுதினேன். நேரில் சந்தித்து பேசினேன். மழைக்கால கூட்டத்தொடரின் போது லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து ஒத்துழைப்பு கேட்டேன். ஆனால் காங்கிரஸ் கட்சி விவாதத்திற்கு தேதி தரவில்லை."
*3. பிற கட்சிகளுடன் ஆலோசனை:*
"காங்கிரஸ் தேதி தராததால் தான் அரசின் ஆலோசனை மற்ற கட்சிகளை நோக்கி விரிவடைந்தது. திமுக, சமாஜ்வாதி கட்சி, ஒய்எஸ்ஆர்சிபி, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா (UBT), AIMIM, பிஜேடி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பரந்த ஒருமித்த கருத்தை உருவாக்கவே இந்த முயற்சி."
*4. இறுதி எச்சரிக்கை:*
"ஏற்கனவே அரசு தீவிரமாக ஆலோசனை நடத்திய பிறகும், மீண்டும் மீண்டும் ஆலோசனை கோரிக்கை வைப்பது ஏன் என்று தெரியவில்லை. இப்போது தேவைப்படுவது ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு தான், அதே கோரிக்கையை மீண்டும் வைப்பது அல்ல. அரசு நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு உறுதியாக உள்ளது. காங்கிரஸ் கட்சி ஆக்கப்பூர்வமான பங்கை வகிக்கும் என்றும், எதிர்கால முக்கிய சட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடாது என்றும் நம்புகிறேன்" என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மசோதா கடந்த ஏப்ரல் 16 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, ஏப்ரல் 17 அன்று நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.*-



கருத்துகள்