--- *சௌதி அரேபியாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் வான்வழி தாக்குதலை தொடர்ந்து விமான சேவைகள் முடங்கியதால்
சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான இந்திய உம்ரா பயணிகளை உடனடியாக மீட்கக் கோரி, கர்நாடகாவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி *மன்சூர் அலிகான்* வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு அக்.16-ம் தேதி கடிதம் எழுதியுள்ளார்.
*கடிதத்தில் கூறியிருப்பதாவது:*
ரியாத் சர்வதேச விமான நிலையம் தாக்குதல் காரணமாக மூடப்பட்டுள்ளது. ஜெத்தா, தம்மாம், மதீனா விமான நிலையங்கள் பகுதி அளவில் இயங்கி வருகின்றன. சவுதி ஏர்லைன்ஸ், ஃப்ளைநாஸ் விமானங்கள் குறைந்த அளவில் இயங்கி வரும் நிலையில், இந்திய விமான நிறுவனங்களான இண்டிகோ, ஏர் இந்தியா தங்கள் சேவைகளை அக்.24 வரை முழுமையாக ரத்து செய்துள்ளன.
இதனால் பயணிகளின் ரிட்டர்ன் டிக்கெட் காலாவதி, தங்குமிட பற்றாக்குறை, பணம் தீர்ந்து போதல், விசா காலாவதியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மருத்துவ தேவை உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மங்களூருவில் இருந்து சென்ற 500 பேர் உட்பட, தமிழ்நாடு, கர்நாடகா, அசாம், குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த பலர் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலர் ஓமன் வழியாக சாலை மார்க்கமாக மும்பை வந்து பின் ரயிலில் ஊர் திரும்பியுள்ளனர்.
இந்திய தூதரகம் ஜெத்தா மற்றும் மக்காவில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகளை திறந்துள்ளது. இருப்பினும் தரையில் ஒருங்கிணைப்பு பிரச்சனை இருப்பதாக குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
*எம்.பி-யின் 3 கோரிக்கைகள்:*
*1.* சிக்கிய பயணிகள் மற்றும் டூர் ஆபரேட்டர்களை தொடர்பு கொண்டு உணவு, தங்குமிடம், மருத்துவம், சட்ட உதவி வழங்க வேண்டும்.
*2.* மனிதாபிமான அடிப்படையில் விரைவாக தாயகம் அழைத்து வர சிறப்பு விமானங்களை இயக்க வேண்டும்.
*3.* பயணிகளை தவறாக வழிநடத்திய தனியார் உம்ரா டூர் ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதே கோரிக்கையை சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவுக்கும் அவர் அனுப்பியுள்ளார். ---


கருத்துகள்