சிறப்பு அஞ்சல் உறை வடிவமைப்பதற்கான ஓவிய போட்டி: கருப்பொருள் “கொவிட்-19 தடுப்பூசி”
குழந்தைகளிடம் இருக்கும் ஓவிய திறனைத் தூண்டுவதற்கும், தபால்தலை பற்றி அறிந்து கொள்வதற்கும், கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தின் சிறப்பு தபால்தலை மையம், சிறப்பு அஞ்சல் உறை வடிவமைப்பதற்கான ஓவிய போட்டியை, அதன் கருப்பொருளாக “கொவிட்-19 தடுப்பூசி” (தடுப்பூசி தேவை, தடுப்பு நடவடிக்கைகள் போன்றவை) என்னும் தலைப்பில் நடத்துகிறது.
தகுதி வரம்பு
6 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் (01.07.2021 அன்று)
போட்டிக்கான நுழைவுக் கட்டணம் ரூ.200/- (ரூபாய் இருநூறு மட்டுமே) வங்கி வரைவோலை அல்லது காசோலை மூலமாக செலுத்த வேண்டும். செலுத்தப்படும் நுழைவுக் கட்டணம், செலுத்துபவரின் பெயரில் புதிய தபால்தலை கணக்கில் வரவு வைக்கப்படும் அல்லது பங்கேற்பாளரின் பெயரில் ஏற்கனவே தபால்தலை கணக்கு இருந்தால் அவர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். புதிய அஞ்சல் வில்லைகள் (Commemorative Stamps) ரூ. 200/- வரை பங்கேற்பாளருக்கு அனுப்பப்படும். மேலும், குழந்தைகள் எதிர்காலத்தில் தங்கள் கணக்கில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
பங்கேற்பாளர்கள் பின்வருவனவற்றை “தலைமை அஞ்சலக அதிகாரி” சிறப்பு தபால்தலை மையம், அண்ணாசாலை தலைமை அஞ்சலம், சென்னை 600 002” என்னும் முகவரிக்கு விரைவுத் தபால் மூலமாகவோ அல்லது பதிவுத் தபால் மூலமாகவோ 28.08.2021 அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தில் பங்கேற்பாளரின் பெயர், பாலினம், வயது, தரநிலை, பள்ளியின் பெயர், வீட்டுமுகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (கட்டாயமாக) காசோலை அல்லது வரைவோலை எண் மற்றும் தேதி PDA எண் (ஏற்கனவே அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தின் சிறப்பு தபால்தலை மையத்தில் கணக்கு இருந்தால்) ஆகியவைகளைக் குறிப்பிட வேண்டும்.
பங்கேற்பாளரின் வயதுச் சான்றுகளான பிறந்ததேதி அடங்கிய ஆதார் அட்டை, பள்ளி அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ் ஆகிய இவற்றில் ஏதாவது ஒன்றை இணைத்து அனுப்பவும்.
தலைமை அஞ்சலக அதிகாரி, அண்ணாசாலை தலைமை அஞ்சலகம், சென்னை 600 002 என்னும் பெயரில் எடுக்கப்பட்ட காசோலை அல்லது வரைவோலை.
முழுமையற்ற விபரங்கள் கொண்ட விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
நுழைவுக் கட்டணம் பெறுவதற்கான கடைசி தேதி 28.08.2021 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
கருப்பொருள் மற்றும் பிற:
வரைதலுக்கான கருப்பொருள் கொவிட்-19 தடுப்பூசி (தடுப்பூசி தேவை, தடுப்பு நடவடிக்கைகள் போன்றவை) ஓவியங்கள் ஏ4 அளவிலான காகிதத்தில் இருக்க வேண்டும்.
குழந்தைகள் தங்கள் வீட்டிலேயே, வசதியான நேரத்தில் ஓவியங்களை வரையலாம். நுழைவுக்கட்டணத்திற்கான காசோலை அல்லது வரைவோலை தபால் துறைக்கு கிடைத்தவுடன் பங்கேற்பாளர்களுக்கான சேர்க்கை எண்கள் தெரிவிக்கப்படும்.
சேர்க்கை எண்கள் (Roll Number) கிடைக்கப் பெற்றவுடன், ஓவியத்தை ஸ்கேன் செய்து JPEG வடிவத்தில் philactivity@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு பங்கேற்பாளரின் எண்ணை (Subject-ல்) குறிப்பிட்டு 31.08.2021 அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ அனுப்ப வேண்டும். ஒவ்வொரு பங்கேற்பாளரும் ஒரு ஓவியத்தை மட்டுமே அனுப்ப வேண்டும்.
தபால் துறையின் வேண்டுகோளின்படி மட்டுமே ஒரிஜினல் ஓவியத்தை அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல் மூலமாக ஓவியங்களை பெறுவதற்கான கடைசி தேதி 31.08.2021 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாமதமாக வரும் ஓவியங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
தேர்வு செயல்முறை மற்றும் பரிசு விவரங்கள்
போட்டி இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும். முதல் நிலை (வயது 6-10) மற்றும் இரண்டாம் நிலை (வயது 11-15). ஒவ்வொரு வகையிலிருந்தும் முதல் நான்கு பேருக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
பரிசுத் தொகை
ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசு
ரூ.2500/- ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு மட்டும்)
ஒவ்வொரு பிரிவிலும் இரண்டாம் பரிசு
ரூ.1500/- ரூபாய் ஆயிரத்து ஐநூறு மட்டும்)
ஒவ்வொரு பிரிவிலும் மூன்றாம் பரிசு
ரூ.1000/- ரூபாய் ஆயிரம் மட்டும்)
ஒவ்வொரு பிரிவிலும் நான்காம் பரிசு
ரூ.500/- ரூபாய் ஐநூறு மட்டும்)
அஞ்சல் துறையின் தேர்வே இறுதியானது.
தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களைத் தவிர மற்ற நபர்களுக்கு எழுத்துப்பூர்வ தகவல் அனுப்பப்பட மாட்டாது.
தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் ஓவியங்கள் சிறப்பு அஞ்சல் உறை மற்றும் சிறப்பு அஞ்சல் முத்திரை தயாரிப்பதற்கான வடிவமைப்புகளாகப் பயன்படுத்தப்படும். இதனால் குழந்தைகள் இந்திய தபால் துறையின் வடிவமைப்பாளராகிறார்கள்.
இந்தத் தகவல், சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலக அதிகாரி திரு.மா.முரளி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








கருத்துகள்