தமிழகத்தில் கோவிட் பாதிப்பு அதிகரிப்பு அனைத்துக் கோவில்களும் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி வரை தரிசனத்துக்கு அனுமதியில்லை
தமிழகத்தின் அனைத்துக் கோவில்களும் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி வரை தரிசனத்துக்கு அனுமதியில்லை ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி ஆடி மாதம் 18 ஆம் நாள் ஆடிப்பெருக்கு
ஆடி மாதம் 8 ஆம் நாள் ஆடிஅமாவாசை ஆடி 18 ஆம் நாள் மற்றும் ஆடி 28 ஆம் நாள் ஆகிய தினங்களில் ஆறுகள் மற்றும் கடற்கரையில்
கூட தடை விதிக்கப்பட்டுள்ளது புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலயங்களுக்கு பக்தர்கள் செல்ல மூன்று நாட்களுக்கு அனுமதி இல்லை என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார். இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் கோவிலில் தரிசனத்திற்கு தடை விதித்ததால், ஏராளமான பக்தர்கள் அவதிப்பட்டனர். கொரோனா பரவலைத் தடுக்க, முக்கியக் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது.
இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசன தடை குறித்து, கோவில் நிர்வாகம் நேற்று முன்தினம் இரவு 9:15 மணிக்குத் தான் தகவல் தெரிவித்தது. இது தெரியாத வெளியூரிலிருந்து வந்த பக்தர்கள், நேற்றுக் காலை இராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தக் இந்து மஹா சமுத்திரத்தில் குவிந்தனர். தடை விதித்ததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தனுஷ்கோடி தேசிய சாலையும் மூடப்பட்டதால், சுற்றுலாப் பயணியர் வேதனை அடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி முதல், வெளியூரிலிருந்து வந்த வாகனங்களை இராமேஸ்வரத்திற்குள் விட மறுத்து, காவல்துறையினர் திருப்பியனுப்பினர். தஞ்சாவூர் , திருவண்ணாமலை, திருச்செந்தூர் உட்பட முக்கிய கோவில்களுக்கு நேற்று வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதியில் ஆடி அமாவாசையன்று திதி, தர்ப்பணம் செய்யத் தடை விதித்து சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க திருப்புவனம் வைகை ஆற்றுப் படுகைக்கு தினசரி நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்வார்கள். ஆடி அமாவாசையன்று ஆயிரக்கணக்கானவர்கள் வருவார்கள் இந்த நிலையில் கொரானோ பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதை தொடர்ந்து மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் ஆலயம், மடப்புரம் காளியம்மன் கோவில் உள்ளிட்டவற்றிற்கு மறு அறிவிப்பு வரும் வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதியில் ஆடி அமாவாசை என்பதால் அன்றும் பக்தர்களுக்குத் திதி, தர்ப்பணம் செய்ய அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள கோவில்களில் நடக்கும் விழாக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. சுவாமிகளுக்கு கோயில்களில் ஆறு காலப் பூஜைகள் வழக்கம் போல் நடக்கும். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்காமல் தடுக்கும் வகையில் ஆடி 18 ஆடிப்பெருக்கு, ஆடிக் கார்த்திகை, ஆடி அமாவாசை போன்ற விழாக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது.திருவிழா என்ற பெயரில் மக்கள் கூட்டம் கூட தடை செய்யப்பட்டுள்ளது. கோவில்களிலுள்ள சுவாமிகளுக்கு கால பூஜைகள் வழக்கம் போல் நடக்கும், என மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் வகையில், சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் பொதுமக்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. எனினும், தனிநபர் நடைபயிற்சி மேற்கொள்ளத் தடையில்லை. மேலும்,, விற்பனைச் சந்தை உள்ளிட்ட பொது இடங்களுக்கு பொதுமக்கள் குடும்பத்துடன் செல்வதைத் தவிர்க்க வேண்டுமென சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னையில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நேற்று முன்தினம் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதன் படி பொதுமக்கள் அதிகம் கூடும் 9 இடங்களில் உள்ள வணிக வளாகங்கள், மார்க்கெட் பகுதிகள் மூடப்பட்டது. ஏற்கெனவே, மெரினா கடற்கரைக்குள் பொதுமக்கள் செல்லத் தடை உள்ளது. எனினும், சாலையோரங்களில் நடைபயிற்சிக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்ட நிலையில், சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில், பொதுமக்கள் அதிகம் கடற்கரைக்கு வரக்கூடும் என்பதால் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மெரினா கடற்கரையில் பிரதானச் சாலையான காமராஜர் சாலையில் நடந்து செல்ல பொது மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.கடற்கரை சர்வீஸ் சாலைக்குச் செல்ல யாருக்கும் அனுமதியில்லை.
இது குறித்து சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில்: கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக 9 இடங்களில் வியாபாரம் செய்யவும், பொதுமக்கள் செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க, பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வரக்கூடாது. மேலும் மருத்துவமனைக்கு தினம் சோதனைக்கு செல்பவர்கள் முகக்கவசத்தை கழற்றிக் கொண்டு செல்கின்றனர். அதனால் கொரோனா பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. மார்க்கெட்டுக்கு குடும்பத்துடன் செல்லாமல் ஒருவர் மட்டும் செல்ல வேண்டும். ஏற்கனவே, தமிழக அரசு சார்பில் கடற்கரைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், நடைபயிற்சிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனவே, தனிநபர் நடைபயிற்சி செல்ல தடையில்லை. மேலும் மெரினாவிற்கு குடும்பத்துடன் செல்ல யாருக்கும் அனுமதியில்லை. காவல்துறை, மாநகராட்சி சார்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டாலும் பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே இரண்டு, மூன்று மாதங்கள் கவனமாக இருக்க வேண்டும். மேலும், தவிர்க்க முடியாத காரணத்தினால் 9 இடங்களில் வணிகப்பகுதிகள் மூடப்பட்டுள்ளது. புதிதாக பாதிப்பு வந்த காரணம் குறித்து ஆய்வு செய்யப்படும். பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும். தேவையில்லாமல் பொதுமக்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.தமிழகத்தில் கோவிட் 3 வது அலையை எதிர்கொள்ள, 50 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சியளிக்க உள்ளதாகவும், இதுவரை 10 ஆயிரம் செவிலியர்கள், 3,800 குழந்தைகள் நல மருத்துவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியன் அகாடமி ஆப் பீடியாட்ரிக்ஸ் (ஐ.ஏ.பி) தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கோவிட் 3 வது அலை தாக்கும் என மருத்துவ வல்லநர்கள் எச்சரித்து வரும் நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. அதன்படி, தமிழகத்தில் கோவிட் 3 வது அலையை எதிர் கொள்ளும் விதமாக செவிலியர்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர்களுக்கு பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதுகுறித்து ஐ.ஏ.பி.,யின் மாநில செயலாளர் கே.ராஜேந்திரன் கூறிய தகவல்
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளையும் சேர்த்து 10 ஆயிரம் செவிலியர்கள், மற்றும் 3,800 குழந்தைகள் நல மருத்துவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கோவிட் 3 வது அலை துவங்குவதற்கு முன்பாக 50 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதே நோக்கம்.
கோவிட் 3 வது அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது, மருத்துவ மேலாண்மை மற்றும் மருத்துவ சாதனங்களைக் கையாள்வது, கோவிட் பாதித்த குழந்தைகளுக்கு எவ்வாறு சிகிச்சையளித்து உயிர்களைக் காப்பது உள்ளிட்ட பயிற்சிகளை இலவசமாக வழங்குகிறோம். என்று தெரிவித்தார்.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,957 பேர் கோவிட் பாதிக்கப்பட்டுள்ளனர். 28 பேர் உயிரிழந்துள்ளனர். 2,068 பேர் குணமடைந்து உள்ளனர் மாநிலத்தின் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது: தமிழகத்தில் மட்டும் 1, 45,321 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப் பட்டதில், தமிழகத்தைச் சேர்ந்த 1952 பேரும் பிற மாநிலத்தவர்கள் 3 பேர் மற்றும் வெளிநாடு சென்று திரும்பிய இருவரையும் சேர்த்து 1,957 பேருக்கு கோவிட் உறுதியானதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,63,544 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 3,77,50,115 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கோவிட் உறுதியானவர்களில் 1,099 பேர் ஆண்கள், 858 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 14,97,577 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 10,65,929 ஆகவும் அதிகரித்து உள்ளது. 2,068 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு திரும்பியதைத் தொடர்ந்து, வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,09,029 ஆக உயர்ந்துள்ளது.
28 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 5 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 23 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,130 ஆக அதிகரித்துள்ளது.








கருத்துகள்