மெய்நிகர் நடைமுறைக்கான இந்தியாவின் முதல் கூட்டமைப்பை தொடங்கியது சென்னை ஐஐடி
‘இந்தியாவில் VR/AR/MR இன்ஜினியரிங் திட்டத்துக்கான கூட்டமைப்பு’ (CAVE) என்றழைக்கப்படும், மெய்நிகர் நடைமுறைக்கான நாட்டின் முதல் கூட்டமைப்பை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது. கல்விநிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொடக்க நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகள் ஆகியவற்றின் ஒரு குழுவாக, இந்த கூட்டமைப்பு சென்னை ஐஐடி-யால் ஒருங்கிணைக்கப்படுகிறது. மெய்நிகர் நடைமுறை(VR), அதிகரிக்கப்பட்ட நடைமுறை (AR), கலப்பு நடைமுறை (MR) மற்றும் தொழில்நுட்ப பயன்பாடு ஆகியவற்றில் உறுப்பினர்கள் புதிய மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் பயன்பாடுகளை உருவாக்க வைப்பதுதான் இந்த கூட்டமைப்பின் முக்கிய நோக்கம். இதன் மூலம் தொழில்துறை ஆதரவாளர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு ஆகியவற்றின் பங்களிப்புடன் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்.
அனைத்து தரப்பினர் , அரசு கொள்கை திட்ட வகுப்பாளர்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் சிறந்த நடைமுறைகள், பேச்சுவார்த்தையை இந்த கூட்டமைப்பு ஊக்குவிக்கும். இது மெய்நிகர், அதிகரிக்கப்பட்ட மற்றும் கலப்பு நடைமுறையில் ஆர்வமுள்ள தொழிற்துறை, கல்வி நிறுவனங்கள், நுகர்வோர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு ஒரு ஆதாரமாக மாற திட்டமிட்டுள்ளது.
இந்த கூட்டமைப்பில் சென்னை ஐஐடி முக்கிய பங்காற்றுவதை சுட்டிக் காட்டிய ‘கேவ்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சென்னை ஐஐடியின் அப்ளைட் மெக்கானிக்ஸ் துறை பேராசிரியர் எம்.மணிவண்ணன் கூறுகையில், ‘‘ நீட்டிக்கப்பட்ட நடைமுறை (XR) மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் புத்தாக்கங்களுக்கு சென்னை ஐஐடி போன்ற வலுவான ஆராய்ச்சி குழு தேவைப்படுகிறது. கல்விநிறுவனத்தால் தொடங்கப்பட்ட கூட்டமைப்பாக, இது புத்தாக்கத்துக்கு முன்னுரிமை அளிக்கிறது, ஒவ்வொரு உறுப்பினருக்கும் அதிக வசதிகள் உள்ளது மற்றும் அனைவரும் ஒன்றாக, பரந்த பார்வையாளர்களை சென்றடைய முடியும் மற்றும் மிகப் பெரிய பணிகளையும் சாதிக்க முடியும்’’ என்றார். .
‘கேவ்’ அமைப்பு இந்தியாவுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பது பற்றி விவரித்த பேராசிரியர் மணிவண்ணன் கூறுகையில், ‘‘மேக் இன் இந்தியா யுகத்தில், நீட்டிக்கப்பட்ட நடைமுறை மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டுக்கான இந்திய கூட்டமைப்பு, மிக பெரியவற்றை கண்டறிய முக்கியமானது’’ என்றார்.
புகழ்பெற்ற நிறுவனத்தை உருவாக்கும் திட்டத்தின் கீழ் சென்னை ஐஐடியில், மெய்நிகர் நடைமுறை மற்றும் தொழில்நுட்ப பயன்பாடுக்கான சீர்மிகு மையத்தால் சமீபத்தில் நடத்தப்பட்ட இணையகருத்தரங்கில், ‘கேவ்’ கூட்டமைப்பை தமிழக அரசின் தொழில்நுட்பத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் நீரஜ் மிட்டல் தொடங்கி வைத்தார்.
இதன் துவக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் நீரஜ் மிட்டல் கூறுகையில், ‘‘ அனுபவத்தை பொதுவானதாக மாற்ற, இந்தியா போன்ற நாட்டுக்கு, இதுபோன்ற கூட்டமைப்பு மிகவும் அவசியம் என்றார். சீர்மிகு மையத்தை நிதி ஆயோக் அமைப்பின் அடல் புத்தாக்க திட்ட இயக்குனர் டாக்டர் சிந்தன் வைஷ்ணவ் தொடங்கி வைத்தார். இந்தியாவின் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மெய்நிகர் நடை முறை / அதிகரிக்கப்பட்ட நடைமுறை ஆகியவற்றில் பல்வேறு முயற்சிகளை கொண்டு வர இந்த மையம் முக்கியமானதாக இருக்கும். இந்திய இளைஞர்களின் திறனை வளர்த்தல், குறிப்பாக எதிர்கால தூண்களாக விளங்கும் குழந்தைகள் உள்ளூர் மொழிகளில் சிறப்பாக கற்பதற்கு இந்த மையம் எப்படி உதவியாக இருக்கும் என்பதை அவர் வலியுறுத்தினார்.






கருத்துகள்