சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வாகனங்களுக்கான வர்த்தக சான்றிதழ் முறையில் விரிவான சீர்திருத்தங்கள்
மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-இன் கீழ் வர்த்தக சான்றிதழ் முறையில் விரிவான சீர்திருத்தங்களை செப்டம்பர் 14, 2022 தேதியிட்ட அறிவிக்கையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே நிலுவையில் உள்ள விதிகளில் காணப்படும் சில முரண்பாடுகள் காரணமாக வர்த்தக சான்றிதழ் குறித்து பல்வேறு விதமான விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன், ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் இன்னல்களையும் சந்திக்க நேர்ந்தது. மேலும், வர்த்தக சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களை சாலை போக்குவரத்து அலுவலகங்களில் நேரடியாகச் சென்று சமர்ப்பிப்பது, நேர விரய நடைமுறையாக இருந்தது.
எளிதான வர்த்தகம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் முயற்சியில் வர்த்தக சான்றிதழ் முறையை சீர்படுத்தி, எளிதான புதிய விதிகளை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இவற்றின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
1. பதிவு செய்யாத அல்லது தற்காலிகமாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே வர்த்தக சான்றிதழ் தேவைப்படும். அதுபோன்ற வாகனங்களை விற்பனையாளர்/ தயாரிப்பாளர்/ மோட்டார் வாகனங்களின் இறக்குமதியாளர் அல்லது 126 விதியில் குறிப்பிடப்பட்டுள்ள சோதனை முகமை மட்டுமே வைத்திருக்க முடியும்.
2. சாலைப் போக்குவரத்து அலுவலகத்திற்குச் செல்லாமல் வாகன் (Vahan) தளத்திலேயே வர்த்தக சான்றிதழ் மற்றும் வர்த்தக பதிவு குறியீடுகளுக்கு மின்னணு வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும், ஒரே விண்ணப்பத்தில் பல்வேறு விதமான வாகனங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.
3. வர்த்தக சான்றிதழ் வழங்குவதற்கான அல்லது புதுப்பிப்பதற்கான கால அவகாசம் 30 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 30 நாட்களுக்குத் தீர்வு காணப்படாத விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படும்.
4. வர்த்தக சான்றிதழ் செல்லுபடியாகும் காலம், 12 மாதங்களில் இருந்து 5 வருடங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
5. விற்பனையாளர் அங்கீகாரங்களை ஒரே சீராக கொண்டு வருவதற்கு, விற்பனையாளர் அங்கீகார சான்றிதழ் (படிவம் 16 ஏ) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
6. கடைகள்/ சேமிப்பு கிடங்குகளில் விற்பனையாளர் அங்கீகார சான்றிதழை காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
7. நவம்பர் 1, 2022 முதல் இந்த விதிகள் அமலுக்கு வரும். தற்போது நிலுவையில் உள்ள வர்த்தக சான்றிதழ்கள், அவற்றின் புதுப்பிப்பு காலம் வரை செல்லுபடியாகும்
கருத்துகள்