வேந்தன்பட்டி கோயில் மண்டபத் தகராறில் ஆம்னி பஸ் அதிபர் அடித்துக் கொலை - 2 பேர் கைது
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் கோயில் திருமண மண்டப தகராறில், ஆம்னி பஸ் அதிபர் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேந்தன்பட்டியை சேர்ந்தவர் சிதம்பரம் (80). சென்னையில் தனியார் ஆம்னி பஸ் நிறுவனம் நடத்தி வந்தார். உறவினர் வீட்டு திருமண விழாவிற்காக கடந்த 19-ம் தேதி சொந்த ஊருக்கு வந்து தன் வீட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்தார்.
அன்று மாலை 4 மணியளவில் அதே ஊரை சேர்ந்த சீனிவாசன் (55), விஜய் (35) ஆகிய இருவரும் சிதம்பரம் வீட்டுக்கு வந்து கோயில் திருமண மண்டபத்தை ஊராரிடம் ஒப்படைப்பது பற்றி பேசியுள்ளனர்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து சிதம்பரத்தை கட்டையால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த சிதம்பரத்தை உறவினர்கள் மீட்டு பொன்னமராவதி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
தந்தையை தாக்குவதை தடுக்க முயன்ற அவரது மகள் இந்துமதி (52)-யும் தாக்குதலில் படுகாயமடைந்தார். அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவல் அறிந்த பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சிதம்பரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக சீனிவாசன், விஜய் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயில் மண்டப பிரச்சினையில் பஸ் அதிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பொன்னமராவதி பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.



கருத்துகள்