*மதுரை உலகத் தமிழ்ச் சங்க துணைத் தலைவராக கவிதா ஜவஹர் - எளிய குடும்பத்தில் இருந்து அரச பொறுப்பு வரை*
தமிழக அரசின் முக்கியமான அமைப்பான மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவராக பட்டிமன்ற பேச்சாளர் *திருமதி கவிதா ஜவஹர்* நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
*சொந்த கதை - இதே கதை போலத்தான் எல்லோருக்கும் ஆரம்பம்:*
சொந்த ஊர் ராஜபாளையம். அப்பா லோடுமேன், அம்மா நூற்பாலையில் வேலை. குடும்ப சூழலால் அண்ணனும் அக்காவும் படிக்கவில்லை. ஆனால் கவிதாவுக்கு சிறு வயதில் இருந்தே நூலகம் செல்லும் பழக்கம். வாசித்த கதைகளை பெற்றோரிடம் சொல்ல ஆரம்பித்ததே பேச்சு ஆர்வமாக மாறியது.
"சின்ன வயசுல கூட்டத்தை பார்த்து பயந்திருக்கேன், மேடையில் வார்த்தை மறந்து நின்னிருக்கேன், என்னை பார்த்து சிரிச்சவங்களையும் பார்த்திருக்கேன். ஆனா அந்த மேடையை விட்டு போகணும்னு மட்டும் நினைச்சதில்லை" என்பது தான் இவரின் மந்திரம்.
கல்லூரி 2-ம் ஆண்டு சுதந்திர தின விழாவில் முதல் பட்டிமன்றம். 2000-ல் ராஜபாளையத்தில் மக்கள் முன் பேசியது தான் சமூக மேடையில் முதல் வாய்ப்பு. கிராமங்களில் இரவு 10 மணிக்கு பட்டிமன்றம் தொடங்கும், பஸ் இல்லாமல் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த நாட்கள் உண்டு. பின்னர் சாலமன் பாப்பையா ஐயா பட்டிமன்றத்தில் பேசும் பெரிய வாய்ப்பு கிடைத்தது.
இன்று வரை சுமார் 3000 மேடைகள், அமெரிக்கா, சிங்கப்பூர், பிரான்ஸ் வரை தமிழ் பேசியுள்ளார். 'கரிசல்காரி' என ரசிகர்கள் அழைக்கின்றனர்.
வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பது சிறு வயது ஆசை. பின்னர் பட்டிமன்றம் இழுத்து வந்தது. 2002-ல் ஜவஹர் அவர்களை திருமணம் செய்தார். கணவர் தான் இரவு நேர மேடைகளுக்கு பெரிய பலம்.
2022-ல் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதே 2022-ல் "நடிகர் விஜய் என் குடும்பத்தாரை அழைத்து விருந்தளித்தார்" என பேட்டி அளித்திருந்தார். தற்போது விஜய் தலைமையிலான அரசு இந்த முக்கிய பொறுப்பை வழங்கியுள்ளது.
எம்.காம், பி.லிட், பி.எட், தஞ்சை தமிழ் பல்கலையில் எம்.ஏ தமிழ் படித்தவர், பெண்கள் முன்னேற்றம் குறித்து கல்லூரிகளில் ஊக்க உரை ஆற்றி வருபவர்.
எளிய குடும்பத்தில் இருந்து தொடங்கி இன்று உலகத் தமிழ்ச் சங்க துணைத் தலைவராக உயர்ந்திருப்பது பலருக்கும் உத்வேகம்.


கருத்துகள்